சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்


சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2017 4:30 AM IST (Updated: 13 Sept 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கடந்த 7-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் சுமார் 300 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

300 பேர் கைது

அதன்பின்னர், கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அந்த வேளையில் 20-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேறு வழியில் வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்ப தொடங்கினார்கள். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்தை தமிழகம் பெறவில்லை. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு இதுவரை கையெழுத் திடவில்லை. ஜெயலலிதா 110-விதியின் கீழ் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என்று அறிவித்தார். அதற்காக ஒரு குழுவும் அமைத்தார். ஆனால் அவருடைய அறிவிப்புக்கு மாறாக இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.

காத்திருப்பு போராட்டம்

நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் 5-வது ஊதியக்குழுவில் ஊதியக்குழு வருவதற்கு முன்பாகவே குழு அமைத்து அது தரும் அறிக்கையை பெற்று, ஊதியக்குழு அமல்படுத்தும் தேதியில் சரியாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதை மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் பரிசீலனை செய்ய வேண்டும்.

எங்கள் கோரிக்கைகளுக்கு தெளிவான அறிவிப்பு வரும் வரை போராட்டத்தை தொடருவோம். முதல்-அமைச்சர் அழைத்து பேசி அரசாணை வெளியிடும் வரை நாளை முதல் (இன்று) அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story