பொதுச்செயலாளர் பொறுப்புக்கு நிகராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம்


பொதுச்செயலாளர் பொறுப்புக்கு நிகராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம்
x
தினத்தந்தி 13 Sept 2017 5:30 AM IST (Updated: 13 Sept 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

பொதுச்செயலாளர் பொறுப்புக்கு நிகராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி இனி கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு இல்லை. இதையொட்டி கட்சியின் சட்ட விதிகளில் புதிய திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு பொதுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுக்குழுவில் 12-வது தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

தலைமை பொதுக்குழு

விதி 5 பிரிவு 3-ன் படி கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் உரிமை ஒருங்கிணைப்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்), இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி பழனிசாமி) ஆகியோரின் அதிகாரத்தில் இருக்கும் வகையில் விதி 19 திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கட்சியின் தலைமை பொதுக்குழு இனி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள், அவைத்தலைவர், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சொத்து பாதுகாப்பு குழு, ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய அமைப்பாக செயல்படும். கட்சியின் முழு அதிகாரம் கொண்ட அமைப்பாக தலைமை பொதுக்குழு செயல்படும்.

அதிகாரம்

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அவசியம் என்று கருதும் பொழுது கூட்டப்படலாம். மேற்படி கூட்டத்திற்கு 15 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும். பொதுக்குழு கூட்டம் நடைபெற குறைந்த அளவு அதன் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு வருகை தந்திருக்க வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதி எண்ணிக்கையினர் கையெழுத்திட்டு கேட்டுக்கொண்டால் பொதுக்குழுவின் தனிக் கூட்டத்தை அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்ட வேண்டும். இதற்காக பிரிவு 7 திருத்தப்படுகிறது.

பொதுச்செயலாளரை தீர்மானிக்கும் விதி 20-ல் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு இனி யாரும் தேர்ந்தெடுக்கப்படவோ அல்லது நியமிக்கப்படவோ மாட்டார்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்கு போட்டியிட விரும்புபவர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் 5 ஆண்டுகளுக்கு அந்த பொறுப்பில் இருப்பார்கள். கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் இவர்களே நிர்வகிப்பார்கள்.

இரட்டை இலை

இடைப்பட்ட காலங்களில் அவர்களில் யாராவது விடுவிக்கப்பட்டால் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் கட்சி பணியை நடத்துவார்கள். பொதுக்குழுவை கூட்டவோ, பொது தேர்தல் சம்பந்தமான முடிவுகளையும் அவர்கள் எடுக்கலாம். கட்சியை காப்பாற்ற அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு எழுதும் அனுமதி படிவங்களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையொப்பம் இடுவதற்கு வகை செய்யும் வகையில் பிரிவு 12-ல் திருத்தம் செய்யப்படுகிறது. கட்சியில் 3-ல் ஒரு பங்கு மகளிருக்கு வாய்ப்பு அளிக்கும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story