5 மாணவருக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்தது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அவமானம்: சென்னை ஐகோர்ட்


5 மாணவருக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்தது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அவமானம்: சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 13 Sep 2017 7:09 AM GMT (Updated: 13 Sep 2017 7:09 AM GMT)

5 மாணவருக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அவமானம் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.


சென்னை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கடந்த 7-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, போராட்டத்துக்குத் தடை விதித்ததோடு, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஆசிரியர்கள் என்ன தொழிலாளர்கள் வர்க்கத்தினரா என்று கேள்வி எழுப்பினார்.

'அரசியல் ஆதாயத்துக்காகவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் செயல்படுகின்றன.  கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது. கல்வி முறையை முன்னேற்றுவதில் உயர் நீதிமன்றம் எந்த சமரசமும் செய்துகொள்ளாது. எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டியதைப் புரிந்துகொள்ளாமல், ஏன் போராட்டம் நடத்துகின்றனர்? 

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும். 40 ஆயிரம், 50 ஆயிரம் என ஊதியம் வாங்கிவிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். 5 மாணவருக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம்” என்று தெரிவித்தார். 

ஆசிரியர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது  என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டால், ஆசிரியர்களே இழப்பீடு தர உத்தரவிட நேரிடும் என்றும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை பற்றி அரசு வரும் 18-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Next Story