ஓய்வுபெற்ற ரெயில்வே பொறியாளர் வீட்டில் 175 பவுன் நகைகள் கொள்ளை
ஓய்வுபெற்ற ரெயில்வே பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள 175 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.48 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரக்கோணம்,
வேலூர் மாவட்டம் அரக்கோணம், விண்டர்பேட்டை, பயணியர் விடுதி தெருவை சேர்ந்தவர் கவுரிநாதன் (வயது 78), ஓய்வுபெற்ற ரெயில்வே முதுநிலை பொறியாளர். இவரது மனைவி சிவகாமி (70). ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர்களது மகள் சங்கீதபிரியா (29) சென்னை, தாம்பரம் பகுதியில் தங்கி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் கவுரிநாதன், மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகளை பார்க்க சென்றார். நேற்று காலை கவுரிநாதன் வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர்கள் கவுரிநாதனை போனில் உங்கள் வீடு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடக்கிறது என்று தெரிவித்தனர்.
175 பவுன் நகைகள் கொள்ளை
உடனடியாக கவுரிநாதன், சிவகாமி இருவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க, பின்பக்கத்தில் உள்ள 2 கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 6 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது.
பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 175 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.48 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த துணிமணிகள் மற்றும் இதர பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது.
இதுகுறித்து சிவகாமி அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.35 லட்சம் ஆகும்.
வேலூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சென்று தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story