அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 பேரிடம் ரூ.68¼ லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 பேரிடம் ரூ.68¼ லட்சம் மோசடியில் ஈடுபட்ட சேலம் தணிக்கை பெண் அதிகாரி, பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் மேட்டூர் ராம்நகர் அருகே உள்ள சக்திநகரை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 26). பட்டதாரி. இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரில், தமிழகத்தில் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர், உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி, மேட்டூர் ராம்நகரை சேர்ந்த தமிழரசி (48), எடப்பாடி ஆலட்சிப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (48) ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு என்னிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் பணம் வாங்கினர்.
ஆனால், வேலைவாங்கி தராமல் ஏமாற்றி விட்டனர். கொடுத்த பணத்தையும் திரும்ப தரவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தமிழரசி, உள்ளாட்சி தணிக்கை துறையில் ஆய்வாளராகவும், ஆறுமுகம் தாராபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருவது தெரியவந்தது.
ரூ.68¼ லட்சம் மோசடி
மேலும் கல்வித்துறையில் காலியாக உள்ள பணிக்கு வேலையில் ஆட்களை சேர்ப்பதற்காக வீரக்கல்புதூர் பேரூராட்சி முன்னாள் சேர்மனும் பா.ம.க. நிர்வாகியுமான தமிழ்வாணன், மேட்டூர் ராம்நகரை சேர்ந்த நடராஜன் (62) ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டு சிவராஜ் உள்ளிட்ட 12 பேரிடம் ரூ.68 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்று தமிழரசி, ஆறுமுகம் ஆகியோரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
வேலைக்காக பணம் கொடுத்த 12 பேரிடமும் தமிழ்வாணன், நடராஜன் ஆகியோர் தரகர் கமிஷனாக தலா ரூ.50 ஆயிரம் எடுத்து கொண்டதும் தெரியவந்தது.
3 பேர் கைது
இந்த நிலையில் நேற்று மாலை மோசடி வழக்கில் உள்ளாட்சி தணிக்கைத்துறை ஆய்வாளர் தமிழரசி, தலைமை ஆசிரியர் ஆறுமுகம், இடைத்தரகர் நடராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான தமிழ்வாணனை போலீசார் தேடிவருகிறார்கள்.
முன்னதாக பெண் தணிக்கை ஆய்வாளர் தமிழரசியை கைது செய்வதற்காக போலீசார் சென்றபோது அவர் வீட்டில் 27 நாய்கள், 13 பூனைகள் வளர்த்ததும் தெரியவந்தது. வீட்டிற்கு சென்ற போலீஸ் ஏட்டு ஒருவரை நாய் கடித்தது. எனவே, நாய்களை அவிழ்த்து விட்டு கடிக்க விட்டதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story