சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை


சுங்கச்சாவடிகளில் ரவுடிகள்  ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
x
தினத்தந்தி 14 Sept 2017 3:00 AM IST (Updated: 14 Sept 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி மைய பணியாளர்களாக ரவுடிகளும், சமூக விரோதிகளும் தான் உள்ளனர் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை,

மதுரை மேலூரைச் சேர்ந்த பழனிகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தேசிய நெடுஞ்சாலை எண் 67-ல் பேட்டவாய்த்தலை முதல் குளித்தலை வரை மணல் குவாரிகளின் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுவதால் அங்குள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, “திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் அவசர மருத்துவ சிகிச்சைக்கான பொருட்கள், அவசர கண்காணிப்பு வாகனம் உள்ளிட்ட வசதிகள் எதுவும் இல்லை. மேலும் பல்வேறு விதிமீறல்கள் உள்ளன. இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொது மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நெடுஞ்சாலைத்துறையின் தமிழக தலைமை பொது மேலாளர் நக்வி மற்றும் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ரவுடிகள், சமூகவிரோதிகள்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பெரும்பாலான சுங்கச்சாவடி மையங்களில் ரவுடிகளும், சமூக விரோதிகளும் தான் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகளின் காரின் முன்பகுதியில் தேசிய கொடியும், நீதித்துறை சின்னமும் இடம் பெற்றிருக்கும். அதை பொருட்படுத்தாமல் நீதிபதிகளின் காரை நிறுத்தி அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்கின்றனர். நீதிபதிகளுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்கள் படும்பாடு என்னவாக இருக்கும்” என்று வேதனை தெரிவித்தனர்.

மேலும், “விதிமீறல்களில் ஈடுபடும் சுங்கச்சாவடி மைய காண்டிராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

அவசர வழி அடைப்பு

பின்னர், “சுங்கச்சாவடி மைய ஒப்பந்தங்களை பெரிய பெரிய நிறுவனங்களிடம் வழங்கிவிட்டு, தற்போது அவர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர். தமிழகத்தில் சுங்கச்சாவடி மையங்கள் இயங்குவதற்கான முறையான திட்டங்கள் இல்லை. கேரளாவில் சுங்கச்சாவடி மையங்களில் தவறு நடந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரே உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறார். இங்கு பல்வேறு சுங்கச்சாவடி மையங்களில் ஆம்புலன்ஸ் செல்ல தனி வழி இல்லை. நோயாளிக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. ஆனால் அனைத்து சுங்கச்சாவடி மையங்களிலும் ஆம்புலன்ஸ், நீதிபதிகளின் கார் போன்றவை செல்லும் அவசர வழி எப்போதும் அடைத்தே வைக்கப்பட்டுள்ளன” என்றனர்.

ஒத்திவைப்பு

அதற்கு அதிகாரிகள், “அவசர வழிகள் திறந்து தான் வைக்கப்பட்டுள்ளன” என்றனர்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “வேண்டுமானால் அருகில் உள்ள சுங்கச்சாவடிக்கு சென்று பார்வையிட்டு வாருங்கள்” என்றனர்.

பின்னர் அதிகாரிகள், “வாகனங்களில் செல்பவர்கள், ‘எலக்ட்ரானிக் டோல் கலெக்சன்’ அட்டையை காண்பித்து செல்லும் வசதி தமிழகத்தில் உள்ள 23 சுங்கச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள 20 மையங்களில் விரைவில் அந்த வசதி செய்யப்படும்” என்றனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர். 

Next Story