நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் -வைகோ வாதம்
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வைகோ பசுமை தீர்ப்பாயத்தில் வாதாடினார்.
சென்னை,
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு நெடுவாசல் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் தென்மண்டல தேசியப் பசுமை தீர்ப்பாயத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் நீதிபதி நம்பியார் அமர்வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி வாதிட்டார்.
வைகோ வாதம்
அப்போது அவர் கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் லைசென்சை மத்திய அரசிடம் பெற்றுள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜனதா கட்சி குடும்பத்தினர் நடத்தும் ஜெம் லேபரட்ரிஸ் நிறுவனம், பசுமை தீர்ப்பாயத்தில் ஆகஸ்டு 2-ந் தேதி அன்று தனது பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ளது.
அதில் மீத்தேன் எரிவாயு, ஷேல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து எரிவாயுகளைக் கொண்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க தனக்கு மத்திய அரசு லைசென்சு கொடுத்துவிட்டது என்றும், எனவே இதை யாரும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் நெடுவாசலில் மீத்தேன் எரிவாயுவை எடுக்க மத்திய அரசு லைசென்சு கொடுத்துள்ளதால் நிலைமை தற்போது மோசமாகி வருகின்றது. இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
ஒத்திவைப்பு
இதையடுத்து, ஓ.என்.ஜி.சி நிறுவனமும், தமிழ்நாடு அரசும், தங்கள் தரப்பு பிரமாண வாக்குமூலங்களை 2 வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி நம்பியார் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “பசுமை தீர்ப்பாயத்துக்கு நியமிக்க வேண்டிய நிபுணர் குழு உறுப்பினரை வேண்டும் என்றே மத்திய அரசு நியமிக் காமல் இருக்கின்றது” என்று கூறினார்.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
மேலும், “இந்தியா முழுவதும் உள்ள பசுமை தீர்ப்பாயங்களை நிரந்தரமாக மூடிவிட மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மக்கள் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், நல்ல சேவை செய்து வருகிற பசுமை தீர்ப்பாயங்களை எல்லாம் மூடிவிட்டு, தங்கள் விருப்பம்போல் கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் நாட்டின் செல்வங்களை கொள்ளை அடிக்கவும், சுற்றுச்சூழலை நாசமாக்கவும் மறைமுகமாக பாதை வகுத்து தருகிறது” என்று குற்றம் சாட்டினார்.
Related Tags :
Next Story