தே.மு.தி.க. 13-ம் ஆண்டு தொடக்கவிழா: நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம் விஜயகாந்த் அறிக்கை


தே.மு.தி.க. 13-ம் ஆண்டு தொடக்கவிழா: நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம் விஜயகாந்த் அறிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2017 10:15 PM GMT (Updated: 14 Sep 2017 7:17 PM GMT)

தே.மு.தி.க. 13-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

சென்னை,

தே.மு.தி.க. 13-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம் என தொண்டர்களுக்கு விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த தே.மு.தி.க. 13-ம் ஆண்டு தொடக்க விழாவில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் கட்சி கொடியை ஏற்றிவைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தே.மு.தி.க. 13-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. தே.மு.தி.க. வுக்கு தனி வரலாறு உண்டு, எந்த கட்சியிடம் இருந்தும் பிரிந்து வராமல் லஞ்சம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதிகொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி. தே.மு.தி.க. தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும். எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், அவதூறு வழக்குகள் வந்தபோதும் பல சவால்களை சந்தித்து தே.மு.தி.க வீறுநடைபோடுகிறது.

தொண்டர்கள் ஒற்றுமையாகவும், உறுதியோடும் இருந்து வரப்போகும் தேர்தல்களை சந்தித்து தே.மு.தி.க. தமிழ்நாட்டில் அசைக்கமுடியாத சக்தி என்றும், தமிழ்நாட்டில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கம் என்றும் நம் உழைப்பால் உணர்த்துவோம்.

தே.மு.தி.க. தமிழக மக்களிடத்தில் அனைத்து இடங்களிலும் வேரூன்றி தழைத்தோங்கி இருக்கிறது என்றால் இந்த இயக்கத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வோடும், விசுவாசத்தோடும் பாடுபடும் லட்சக்கணக்கான உண்மையான நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் காரணம் என்பதை நான் நன்கு அறிவேன். தே.மு.தி.க. தனக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு முக்கியமாக சாதி, மதம், இனம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சியாக தொடர்ந்து பாடுபட்டு வருவதே.

அறவழியில் மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல்கொடுத்து போராடி வரும் இயக்கமாகும். கடினமான நேரத்தையும், காலத்தையும் தந்து கடவுள் நம்மை சோதிக்கும் போதெல்லாம் பொறுமையாக காத்திருக்கும் நம்முடைய உறுதிக்கு மக்கள் தரப்போகும் வெற்றிக்காக உயர்ந்த சிந்தனையோடு, மக்கள் நம் இயக்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உயர்த்தும் வண்ணம் செயல்படுவோம்.

வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதை கருத்தில்கொண்டு எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம். உண்மையான கொள்கைக்காக லட்சியத்திற்காக நம் இயக்கத்தில் உள்ள லட்சக்கணக்கான நல்ல உள்ளங்களுடன் என் பயணம் என்றும் தொடரும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story