அண்ணா பிறந்தநாளையொட்டி காவல்துறை, சீருடை அதிகாரிகள்-பணியாளர்கள் 128 பேருக்கு பதக்கம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


அண்ணா பிறந்தநாளையொட்டி காவல்துறை, சீருடை அதிகாரிகள்-பணியாளர்கள் 128 பேருக்கு பதக்கம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Sept 2017 3:30 AM IST (Updated: 15 Sept 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பிறந்தநாளையொட்டி காவல்துறை, சீருடை அதிகாரிகள்-பணியாளர்கள் 128 பேருக்கு பதக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல் ரேகை பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தமிழக முதல்- அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல்துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலைகாவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் துணை இயக்குனர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் 6 அலுவலர்களுக்கும் மற்றும் விரல் ரேகை பிரிவில் ஒரு காவல் கண்காணிப்பாளருக்கும், ஒரு காவல் துணை கண்காணிப்பாளருக்கும் ஆக மொத்தம் 128 பேருக்கு, அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழக முதல்-அமைச்சரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் பதக்கம்

பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு அவரவர் தம் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி ஒட்டுமொத்த மானியத் தொகையும் வெண்கல பதக்கமும் அளிக்கப்படும். முதல்-அமைச்சர் பின்னர் நடைபெறும் விழா ஒன்றில், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்குவார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கொலை, கொள்ளை, திருட்டு, சங்கிலி பறிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட, தலைமறைவாக இருந்த குற்றவாளி ராமையா என்கிற ரமேஷ் என்பவரை 6.11.2016 அன்று பிடிக்கும்போது திருநெல்வேலி மாநகரம், கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றும் பா. திருமலை நம்பியை குற்றவாளி இரும்பு கம்பி கொண்டு தாக்கியதில் தனது இடது தொடையில் காயப்பட்டார்.

எனவே அவரது தன்னலம் கருதாத கடமையுணர்ச்சி மிகுந்த வீரதீர செயலை பாராட்டி அவருக்கு காவல் துறைக்கான தமிழக முதல்-அமைச்சரின் வீரதீர செயலுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பரிசு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story