ஜெயலலிதாவின் ஆத்மாவிடம் இருந்து டி.டி.வி. தினகரன் தப்பிக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி
கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் செய்யும் டி.டி.வி. தினகரன் ஜெயலலிதாவின் ஆன்மாவிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை,
அ.தி.மு.க. (அம்மா, புரட்சி தலைவி அம்மா) அணியின் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பில் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் கூட்டம் சென்னை தங்க சாலை மணிக்கூண்டு அருகே நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் திராவிட ஆட்சிக்கு வித்திட்டவர் அண்ணா. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்ற அண்ணாவின் கனவை எம்.ஜி.ஆர். நிறைவேற்றினார். எம்.ஜி.ஆர். கண்ட கனவை ஜெயலலிதா நிறைவேற்றினார்.
மத்திய அரசுடன் இணக்கமாக உறவு வைத்திருப்பதால் தான் தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு பற்று இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். மத்திய அரசுக்கு அடிமையாக்கி விட்டதா? சிலர் கேலி செய்கிறார்கள். மத்திய அரசிடம் சுமுக அணுகுமுறைகள் இருந்து கொண்டிருந்தால் மாநிலத்துக்கு தேவையான நிதி கிடைக்கும்.
தி.மு.க.வுடன் டி.டி.வி.தினகரன்
தி.மு.க.வில் தலைவராக முடியாத மு.க.ஸ்டாலினை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
திட்டமிட்டு டி.டி.வி.தினகரன் தி.மு.க.வுடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலேயே குறைவான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெற்றிவேல் எம்.எல்.ஏ., இன்றைய தினம் தி.மு.க.வுடன் இணைந்து ஒரு வழக்கு தொடுத்து இருக்கிறார். எம்.ஜி.ஆர். தொடங்கி, ஜெயலலிதா வழிநடத்திய இந்த கட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் துரோகம் நினைப்பவர் டி.டி.வி.தினகரன்.
ஜெயலலிதா ஆத்மா
எங்களை வீட்டுக்கு போக சொல்கிறார்கள். நான் வீட்டில் இருந்து கூட்டத்துக்கு வந்தேன். கூட்டம் முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிடுவேன். ஆனால் அவர் (டி.டி.வி.தினகரன்) மாமியார் வீட்டுக்கு தான் செல்லப்போகிறார். அது எந்த மாமியார் வீடு? என்று உங்களுக்கே தெரியும்.
ஆண்டவன் மேலே இருக்கிறான். ஜெயலலிதாவின் ஆத்மா மேலே இருந்து எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் ஆத்மாவிடம் இருந்து யாரும் தப்பிக்கவே முடியாது. அதில் அவரும் (டி.டி.வி.தினகரன்) தப்பிக்க முடியாது. ஆகவே இந்த கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் நினைப்பவர்களை ஜெயலலிதாவின் ஆத்மா மன்னிக்கவே மன்னிக்காது.
இரட்டை இலை சின்னம்
கட்சியின் அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் நியமனம் தான் தேர்தல் ஆணையம் மூலம் செல்லுபடி ஆகும். இவரை போல துரோகம் செய்யும் ஆட்களின் பெயர்களை அன்றே தேர்வுசெய்து, தலைமை கழகத்தில் ஜெயலலிதா கொடுத்து வைத்திருக்கிறார். இரட்டை இலை சின்னத்தை பெறுவோம். என்றென்றும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கட்சியின் இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், நடிகர் அஜய்ரத்தினம், வேளாங்கண்ணி உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி வீரவாள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story