தூய்மையே சேவை இயக்கம்: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் தூய்மையே சேவை இயக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தார்.
சென்னை,
சுத்தமான இந்தியா என்ற இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம் என்ற நோக்கத்தில் தூய்மையே சேவை இயக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதன் தொடக்க விழா மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. 15-ந்தேதி முதல் (நேற்று) காந்தி பிறந்தநாளான அடுத்த மாதம் அக்டோபர் 2-ந்தேதிவரை நடக்கும் தூய்மையே சேவை இயக்கத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அதற்கான உறுதிமொழியை அவர் படித்தார். அதை அங்கிருந்த அரசு அதிகாரிகள், ஊழியர்கள் திரும்ப வாசித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வாசித்த உறுதிமொழி வருமாறு:-
முழுமையாக அர்ப்பணித்து...
தூய்மையே சேவை இயக்கத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து அதன் மூலம் சுத்தமான, சுகாதாரமான புதிய பாரதத்தை உருவாக்க வேண்டும். வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும்.
வீடுகளில் கழிவுக்குழிகளுடன் கூடிய கழிப்பறைக ளைக் கட்ட வேண்டும். அதை கட்டாதவர்களை கட்ட செய்து, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத கிராமங்களையும் நகரங்களையும் உருவாக்க பாடுபட வேண்டும்.
மறுசுழற்சி
கழிப்பறையை பயன்படுத்துவதுடன் கை, கால்களை சுத்தமாக கழுவுவதோடு இதர சுகாதார பழக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும். குறைத்தல், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு என்ற கோட்பாட்டின்படி திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தை பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் உறுதிமொழி வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story