‘வழக்குகளை இழுத்தடிக்கக்கூடாது’ வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுரை
வழக்குகளை இழுத்தடிக்கக்கூடாது என்று வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுரை வழங்கினார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு பாரம்பரிய கட்டிடத்தின் 125-வது ஆண்டு விழா நேற்று ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பேசுகையில் கூறியதாவது:-
நீதித்துறை நடைமுறையில் 3 முக்கிய விஷயங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். கோர்ட்டில் விசாரணை உரிய நேரத்தில் தொடங்க வேண்டும். கோர்ட்டுக்கு வருவதில் காலதாமதம் இருக்கக் கூடாது. கோர்ட்டில் நேரத்தை பராமரிப்பது என்பது சட்டமாகும். நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை சட்டங்கள்தான். எனவே நீதிபதி மற்றும் வக்கீல்கள் காலதாமதம் செய்வது, அந்த சட்டத்தை மீறுவதாக அமைந்துவிடும்.
இழுத்தடிக்கக்கூடாது
வழக்குகளை தள்ளி வைக்க கோரும் நோய் போன்ற தன்மைக்கு ஆளாகக் கூடாது. இதற்கு எதிரான நிலையை மேற்கொள்ள வேண்டும். இது வக்கீல்களுக்கு மட்டுமல்ல நீதிபதிகளுக்கும் கூறப்படும் அறிவுரையாகும். நீதிபதிகளுக்கு இருக்கும் சில தன்மைகள் பற்றியும் புத்தகங்கள் எழுதப்பட்டு உள்ளன.
வழக்குகளை இழுத்தடிக்கும் மனப்பாங்கை வக்கீல்கள் வளர்த்துக் கொள்ளக் கூடாது. சில வழக்குகளில் கவனமாக தயார் செய்ய வேண்டியது உள்ளது. எல்லா வழக்குகளிலும் அப்படி இருப்பதில்லை. எனவே எப்போதுமே கோர்ட்டுக்கு தயார் நிலையில் வாருங்கள். வந்த பிறகு வழக்கை தள்ளி வைக்க கோராதீர்கள். நீதிபதி யாராவது வழக்கை தள்ளி வைப்பதற்கு முன்வந்தால், நீங்கள் அமைதியாக, “நான் வாதிட தயாராக இருக்கிறேன். நீங்கள் தயவு செய்து வாதத்தை கேளுங்கள்” என்று சொல்லுங்கள். இதை நீதிபதி கண்டிப்பாக கேட்பார்.
இவ்வாறு தீபக் மிஸ்ரா கூறினார்.
ரவிசங்கர் பிரசாத்
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில் கூறியதாவது:-
கவர்னர் ஜெனரல் பதவிக்கு வந்த ராஜாஜி, ஜனாதிபதியான ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் இங்கு பணியாற்றிவர்கள். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் அரசியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் எனக்கு தொடர்பு இருந்தது. சட்ட உதவிக்காக அவர் சார்பில் நான் சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி இருக்கிறேன். வழக்குகளை பற்றி பேசும்போது, தனது தரப்பு கருத்துகளை அவர் சிறப்பாக எடுத்துரைப்பார்.
ஒருமுறை நான் அவரிடம், உங்களுக்கு நல்ல சட்ட அறிவு இருக்கிறது என்றேன். அதற்கு அவர், நான் வக்கீல் தொழிலுக்கு வராததற்காக வருத்தப்படுகிறேன் என்று பதில் அளித்தார். மேலும், எனது தரப்பு வழக்குகளை தயார் செய்வதில் நான் அதை ஈடு செய்துகொள்கிறேன் என்றார்.
நிலுவையில் உள்ள வழக்குகள்
தமிழ்நாட்டில் 31.12.2016 வரையிலான வழக்குகளின் நிலை குறித்த குறிப்புகளைப் படித்தேன். அதில் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரமாக உள்ளது. மற்ற கீழ்க் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 99 ஆயிரமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பதற்கு தனியாக திட்டமிட வேண்டும். நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும்.
இதுபற்றி முதல்-அமைச்சரிடம் பேசியிருக்கிறேன். அரசு தரப்பு வழக்குகள் குறைக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறேன். இதற்காக நாம் அனைவருமே ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். வழக்குகளை தீர்த்து வைப்பதற்காக நியாய மித்ரா என்ற புதுத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இணையதளம்
இளம் வக்கீல்களுக்கான இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. அதில் அவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏழைகளுக்கு நீதி வழங்குவதில் உங்கள் சேவை பின்னர் பயன்படுத்திக் கொள்ளப்படும். அதற்கான வழிமுறைகள் விரைவில் நடைமுறைக்கு வரும். கடந்த 3 மாதங்களில் மட்டும் 158 வக்கீல்கள் அதில் பதிவு செய்து உள்ளனர்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
Related Tags :
Next Story