ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதா? டி.டி.வி.தினகரனுக்கு அமைச்சர்கள் கண்டனம்


ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதா? டி.டி.வி.தினகரனுக்கு அமைச்சர்கள் கண்டனம்
x
தினத்தந்தி 17 Sept 2017 3:53 AM IST (Updated: 17 Sept 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக கூறி, டி.டி.வி.தினகரனுக்கு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அ.தி.மு.க. சார்பில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால், 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அப்போது சசிகலா, அவருடைய குடும்பத்தினர் மட்டுமே பார்த்தனர். எங்களால் பார்க்க முடியவில்லை. ஜெயலலிதா இறந்ததும், பொதுச்செயலாளராக சசிகலா இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அவருக்கு முதல்-அமைச்சர் ஆசை வந்தது.

உடனே முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்று விட்டார். சசிகலா குடும்பத்தினர் தான், ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என தமிழக மக்கள் பேசுகின்றனர். சிகிச்சைக்கான மருந்தை உலகத்தில் எங்கு இருந்தாலும் வாங்கி இருக்கலாம். ஆனால், நோய் முற்றி இயற்கையாக மரணம் அடைய வேண்டும் என விட்டு விட்டனர்.

தர்மம் காப்பாற்றப்பட்டது

உண்மையை பேசி விடுவார் என்பதற்காக மத்திய மந்திரி அருண்ஜெட்லி, கவர்னர், ராகுல்காந்தி என பலர் வந்தும் யாரையும் பார்க்க விடவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரை நிறுத்தலாம் என யோசித்த போது, டி.டி.வி.தினகரன் தன்னை போட்டியிடும்படி சசிகலா கூறியதாக தெரிவித்தார். இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆகிவிட்டால் முதல்-அமைச்சராகி விடவேண்டும் என திட்டமிட்டார். இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், தர்மம் காப்பாற்றப்பட்டது.

டி.டி.வி.தினகரன் கட்சியில் உறுப்பினராக கூட இல்லை. சில நாட்கள் அவருடன் இருந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

ஆட்சியை கவிழ்க்க சதி

19 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளதாக கூறும் அவர், தி.மு.க.வுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார். அவரிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் பேசுகின்றனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.

இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

ஜெயக்குமார்

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், “தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்து வருவதாக டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறாரே?”, என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

இந்த (டி.டி.வி.தினகரன்) மாபியா கும்பலுடன், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கும்பலும் தற்போது சேர்ந்து இருக்கிறது. ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளையடித்து இந்தியாவிலேயே நமது தமிழகத்தை தலைகுனிய வைத்த பெருமை, இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் கும்பலுக்கு தான் உண்டு.

தீண்டத்தகாத பாம்பு

அப்படிப்பட்ட 2ஜி கொள்ளை கும்பல், இந்த கும்பலுடன் சேர்ந்து தமிழகத்தை சூறையாட எந்த காலத்திலும் நாங்கள் விடமாட்டோம். தமிழக மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். பரமசிவன் கழுத்தில் இருந்து விழுந்த தீண்டத் தகாத பாம்பு சசிகலா.

இந்த மாபியா கும்பல் தற்போது பல விதமாக பேசிவருகிறது. தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்து வருவதாக புகார் கூறியிருக்கிறார், டி.டி.வி.தினகரன். இது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது. நடிகர் கமல்ஹாசன், தான் பேசும் கருத்தில் தெளிவு இல்லாமல் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெல்லமண்டி நடராஜன்

திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், “ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலா, தினகரன் குடும்பத்தினரே காரணம். அவர்கள் தான் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, எங்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை. அ.தி.மு.க.வில் உறுப்பினராககூட இல்லாத தினகரன், எங்களை எல்லாம் நீக்கி வருகிறார். அவர் விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்வார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். அதனையே நானும் வழிமொழிகிறேன். இந்த ஆட்சியை யாரும் கவிழ்க்க முடியாது. திருச்சியில் 19-ந் தேதி தினகரன் நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு நாங்க இடையூறாக இல்லை” என்று கூறினார்.

தம்பிதுரை

கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், “எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை தொடர்ந்து காப்பாற்றுவோம். ஜெயலலிதா தந்த ஆட்சியை காப்பாற்றுவோம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.

தொடர்ந்து அவரிடம், ஆட்சியை கலைத்து விடுவோம் என டி.டி.வி.தினகரன் கூறியது பற்றி கேட்டபோது ‘ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது’ என கூறினார்.

கும்பகோணத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுக்கு ஜெயலலிதா மட்டுமே பொதுச்செயலாளர். வேறு யாரையும் பொதுச்செயலாளராக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தற்போது தினகரன் கட்சியில் உள்ளவர்களின் அனைத்து பொறுப்புகளையும் எடுத்து வருகிறார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரது பொறுப்பை எடுத்திருப்பார். தற்போது நான் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. தலைமைக்கு தினகரனை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. அதே நேரத்தில் சசிகலாவை ஒதுக்க முடியாது. சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி வகிக்க முடியாது. தினகரன் அணியில் உள்ள 19 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு ஆட்சியை கலைக்க முடியாது. அ.தி.மு.க. ஆட்சியை கலைப்போம் என்று கூறுபவர்கள் துரோகிகள். அவர்களுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பெயரை கூற தகுதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story