சொத்து விற்பனை விவகாரத்தில் சமரசம் பேச நடிகை விஜயசாந்தி ஐகோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவு
சொத்து விற்பனை செய்த விவகாரத்தில் சமரசம் பேச நடிகை விஜயசாந்தி சென்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
மன்னன் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் விஜயசாந்தி. பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு சொந்தமான அசையா சொத்துகளை எழும்பூரைச் சேர்ந்த இந்தர்சந்த் ஜெயினுக்கு ரூ.5 கோடியே 20 லட்சத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்துள்ளார்.
இதில், ரூ.4 கோடியே 68 லட்சத்தை விஜயசாந்தி பெற்று விட்டதாகவும், சொத்துகளை விற்க தன்னிடம் ஒப்பந்தம் செய்துவிட்டு வேறு நபருக்கு சொத்தை விற்றுவிட்டதாகவும், எனவே விஜயசாந்தி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் இந்தர்சந்த் ஜெயின் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
ஆஜராக உத்தரவு
இதைதொடர்ந்து இந்தர்சந்த் ஜெயின் எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜயசாந்தியும், ஜார்ஜ் டவுன் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்தர்சந்த் ஜெயினும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இருதரப்பிலும் சமரசம் பேச ஒத்துழைப்பு தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 18-ந் தேதி(அதாவது நாளை) விஜயசாந்தி ஐகோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அவ்வாறு ஆஜராகும் பட்சத்தில் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடப்படும் என்று இருதரப்பிலும் ஆஜரான வக்கீல்களிடம் நீதிபதி கூறினார்.
Related Tags :
Next Story