சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
சென்னை,
தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ‘நடிகர் திலகம்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர்.
பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசன் கடந்த 2001–ம் ஆண்டு ஜூலை 21–ந் தேதி மரணம் அடைந்தார். அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு அரசிடம் இடம் கேட்கப்பட்டது. அப்போது 2002–ம் ஆண்டு முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே 28 ஆயிரத்து 300 சதுரடி இடம் ஒதுக்கி கொடுத்தார்.
பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி அப்படியே நின்று போனது. இந்த நிலையில் கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு 26–ந் தேதி சட்டசபையில் 110–விதியின் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, ‘சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்ட இடத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்’ என்றார்.
அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது.
சிவாஜி கணேசன் பிறந்தநாளான இன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். மணிமண்டபத்தில் உள்ள சிவாஜியின் படத்திற்கு துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் கலந்துக் கொண்டனர். மணிமண்டபம் திறப்பு விழாவில் சிவாஜி குடும்பத்தினர் ராம்குமார், பிரபு மற்றும் விக்ரம் பிரபு பங்கேற்று உள்ளனர். மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினி, கமல், நடிகர்கள் ராஜேஷ், விஜயகுமார், நாசர், சரத்குமார், விஷால், ராதிகா, கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளனர்.
விழாவிற்கு வந்த நடிகர் ரஜினி, கமலை துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கை குலுக்கி வரவேற்றார்.
Related Tags :
Next Story