திரைப்பட விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


திரைப்பட விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2017 5:30 AM IST (Updated: 2 Oct 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் திரைப்பட விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறும் என்று சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை திறந்து வைத்த துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னை அடையார் சத்யா ஸ்டூடியோ அருகே கட்டப்பட்டுள்ள சிவாஜிகணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திறந்துவைத்தார்.

விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திரைப்படத்துறையில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் எனும் நாடகத்தில், பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் ஒப்பற்ற நடிப்பு திறனைக் கண்ட தந்தை பெரியார், அதுவரை கணேசன் என்று அழைக்கப்பட்ட நடிகர் திலகத்தினைப் பாராட்டி, ‘சிவாஜி கணேசன்’ என்று அழைத்து பெருமைப்படுத்தினார். அன்றிலிருந்து அந்த பெயரே அவருக்கு நிலைத்து நிற்க காரணமாக அமைந்தது. பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோராலும் பாராட்டப்பட்டவர் சிவாஜிகணேசன்.

தெளிவான, உணர்ச்சிப்பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல் வளமும், தலை சிறந்த நடிப்புத்திறனும் இருந்ததால் நடிகர் திலகம் என்றும், நடிப்பு சக்கரவர்த்தி என்றும், நடிப்புலக மேதை என்றும், மக்களாலும் திரையுலகத்தினராலும் புகழப்பட்டவர் சிவாஜிகணேசன்.

பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், திருவிளையாடல் போன்ற பல்வேறு திரைப்படங்களில் சிவாஜிகணேசன் நடித்த நடிப்பும், பிரசித்தி பெற்ற அவரது வசன உச்சரிப்புகளும் உலகத் தமிழர்கள் அனைவரது நெஞ்சங்களிலும் இன்றும் நீங்காத நினைவாக இருந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு அரசின் சார்பில் கலைமாமணி விருது, இந்திய அரசின் சார்பில் பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, பிரான்ஸ் அரசின் சார்பில், செவாலியர் விருது, இந்திய அரசின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது என பல பெருமைகளுக்குரிய விருதுகளைப் பெற்று, அந்த விருதுகளுக்கே பெருமை சேர்த்தவர் சிவாஜிகணேசன்.

சிவாஜிகணேசனின் குடும்பத்தினர், மூன்றாம் தலை முறையாக திரை உலகில் பணியாற்றி, அவருக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.

தமிழ் திரைப்படத்துறைக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்திடும் வகையிலும் தமிழ் திரைப்படத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் உற்சாகமும், உத்வேகமும் பெறுகின்ற வகையிலும், ஜெயலலிதா அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து விருதுகளும், சென்னையில் சிறப்பான முறையில் விழாவெடுத்து, மிக விரைவில் வழங்கப்படும். சிவாஜிகணேசனின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நின்று தமிழகத்திற்கு மட்டுமல்ல அகில உலக திரையுலகத்திற்கும் பெருமை சேர்க்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் கனவு நனவாகி இருக்கிறது. வீரம், காதல் காட்சிகளில் அவருக்கு நிகராக சினிமா காட்சிகளில் யாரும் நடிக்க முடியாது. மறக்கமுடியாத மாமனிதனுக்கு மணிமண்டபம் அமைத்ததற்காக ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

தகவல் மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, திரை உலகினர் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து துறை ரீதியாக ஆலோசித்து வருகிறோம். மணிமண்டபத்தில் சிவாஜிகணேசன் படத்தின் வசனங்களும், காட்சிகளும் வைக்கும் பணியும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்றார்.

விழாவில், அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், பெஞ்சமின், நட்ராஜ் எம்.எல்.ஏ., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இரா.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர், சிவாஜிகணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் பிரபு மற்றும் குடும்பத்தினர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவருடைய மனைவி ராதிகா சரத்குமார், ஐசரிகணேஷ், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் விஜயகுமார், சத்யராஜ், மன்சூர் அலிகான், மனோபாலா, ராஜேஷ், ஸ்ரீமன், டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், நடிகைகள் சுஹாசினி, சச்சு, சிவாஜி சமூகநலப் பேரவையின் தலைவர் கே.சந்திரசேகர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story