18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி வேண்டுகோள்


18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம்,  பழனிசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Oct 2017 3:15 AM IST (Updated: 2 Oct 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை,

2 நாட்கள் நடைபெறும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களில் 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க. (அம்மா, புரட்சித் தலைவி அம்மா) ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு

இளைய வாக்காளர்கள் (புதிய வாக்காளர்கள்) மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்த்தல்; வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிழைகளை நீக்குதல் முதலான பணிகள் இந்திய தேர்தல் ஆணையம் பணித்துள்ள கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான மனு அளிக்க கால அவகாசம் 3-10-2017 முதல் 31-10-2017 வரை ஆகும். சிறப்பு முகாம் 8-10-2017 மற்றும் 22-10-2017 ஆகிய நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில், தலைமை கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு, வட்டம், ஊராட்சி கழக செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும், குறிப்பாக கட்சியின் சார்பில் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு என்று நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களும், தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

தலைமைக்கு தெரிவிக்க வேண்டும்

18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிவந்துள்ளவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும்; வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கும்; வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்வதற்கும் தேவையான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில் வழங்கி இப்பணியை முழுமையாக செய்து முடித்து, இதுகுறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் மூலம் தலைமை கழகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story