விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்யக்கூடாது அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்யக்கூடாது அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Oct 2017 3:15 AM IST (Updated: 3 Oct 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்யக்கூடாது என்று அதிகாரி களுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த மூலக்கடையைச் சேர்ந்தவர்கள் கல்யாணி, சீனிவாசன். இவர்கள் மாநகராட்சி வழங்கிய திட்ட அனுமதியை மீறியும், உரிய விதிமுறைகளை பின்பற்றாமலும் மூலக்கடை பகுதியில் கட்டிடம் கட்டியதாக கூறி அந்த கட்டிடத்தை இடிக்க அவர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

இதை ரத்து செய்யக்கோரி அவர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்தனர்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர்கள் முறையாக பெற்ற திட்ட அனுமதிபடியே கட்டிடங்களை கட்டி உள்ளனர். வேறொரு திட்ட அனுமதியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மனுதாரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், இருவரும் விதிமீறி கட்டிடம் கட்டி இருந்தால் சட்டப்படி மீண்டும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.

விதிமீறல் கட்டிடங்களை அதிகாரிகள் வரன்முறை செய்யக்கூடாது. விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறை செய்த அதிகாரிகளை அதே பணியில் தொடர அனுமதிக்கக்கூடாது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story