ஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷனுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி நாளை விசாரணை
ஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷனுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளிக்கபட்டு உள்ளது. நாளை விசாரணை நடைபெறுகிறது.
முதல் - அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா எப்படியும் உயிர் பிழைத்து திரும்பி விடுவார் என்றே அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற வகையிலேயே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்திகள் வெளிவந்தன.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பிரிந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்.சும் கடந்த மாதம் கை கோர்த்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கபட்டு உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தனது பணியைதொடங்கி உள்ளார். இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனை ரத்துசெய்யக்கோரி, மூத்த வழக்கறிஞர் கே.என்.விஜயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 'சட்ட விரோதமாக இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த விசாரணை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த ஆணையம் அமைத்தது தொடர்பாக மனு செய்ய கோர்ட் அனுமதி அளித்தது. இந்த மனு, நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.
Related Tags :
Next Story