ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசுவதற்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசுவதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
சென்னை,
திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்தவர் முருகானந்தம். அ.தி.மு.க. பிரமுகர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறந்து போனார். அவரது மரணத்தில் பல்வேறு விதமான கருத்துகள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து எந்த தெளிவான விடையும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 17.8.2017 அன்று அறிவித்தார். இருந்தபோதிலும் நீதி விசாரணையை தொடங்கவில்லை.
நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பேசினர். இதுபோன்று பேசுவதால் நீதி விசாரணை நேரடியாகவோ, மறைமுகமாவோ பாதிக்கும். எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பொது மேடைகளில் பேசுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தில் உண்மையை கண்டறிய நீதி விசாரணையை உடனடியாக தொடங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை அரசு அமைத்துள்ளதாகவும், அந்த கமிஷன் தனது பணியை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்து அது தொடர்பான அரசாணையை தாக்கல் செய்தார்.இதைதொடர்ந்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன்பின்பு மனுதாரர் தரப்பு வக்கீல், ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘பேச்சு உரிமை என்பது அடிப்படை உரிமை. எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசுவதற்கு தடை விதிக்க முடியாது. மனுதாரரின் இந்த கோரிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என்று உத்தரவிட்டனர்.