அரசை விமர்சிப்பவர்கள் மீது தேச துரோக வழக்குகள்: தமிழக அரசு என் மீது வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ள தயார்


அரசை விமர்சிப்பவர்கள் மீது தேச துரோக வழக்குகள்:  தமிழக அரசு என் மீது வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ள தயார்
x
தினத்தந்தி 4 Oct 2017 3:45 AM IST (Updated: 4 Oct 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

அரசை விமர்சிப்பவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. என் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ள தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு கடந்த 1-ந் தேதி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவர் ஊட்டியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையை திறந்து வைத்தார். ஏ.டி.சி. திடலில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

நேற்று முன்தினம் குன்னூர் சிம்ஸ் பூங்கா, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா ஆகியவற்றை சுற்றிப்பார்த்தார். குன்னூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த அவர், நேற்று காலை தொண்டர்கள், பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவருடன் புகைப்படம் எடுக்க தொண்டர்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

பின்னர் அவர் கார் மூலம் கோவை புறப்பட்டார். முன்னதாக மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசை விமர்சிப்பவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவரான என் மீதும் கூட வழக்கு போடலாம். ஆனால் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

நான் கேட்பது என்ன வென்றால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது 89 கோடி ரூபாய் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் மீதும் வழக்கு போட வேண்டும்.

வருமான வரித்துறையால் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் ஆகியோருக்கும் இந்த தொகையில் எவ்வளவு பங்கு உண்டு என்பதை தெரிவிக்க வேண்டும். குட்காவில் 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக வருமான வரித்துறை மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக டி.ஜி.பி. பெயரும் உள்ளது. இப்படி பார்க்கும் போது அவர்கள் மீதும் வழக்குபோட வேண்டும்.

உலகத்தில் உள்ள 7 அதிசயங்களில் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் இடம் பெற்றுள்ளது. தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. தாஜ்மகாலை சுற்றுலா வரைபடத்தில் இருந்து எடுத்தது, இதுவும் ஒன்றாக உள்ளது. இதன் மூலம் இந்துத்துவாவை திணிப்பது வெட்ட வெளிச்சமாகிறது. மேலும் இந்த செயலினால் மத்திய ஆட்சி மதவாத ஆட்சி என்பது உறுதி ஆகிறது.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Next Story