மூளைச்சாவு அடைந்தவரின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது


மூளைச்சாவு அடைந்தவரின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது
x
தினத்தந்தி 4 Oct 2017 5:15 AM IST (Updated: 4 Oct 2017 12:55 AM IST)
t-max-icont-min-icon

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது கல்லீரல், சிறுநீரகத்தை நடராஜனுக்கு பொருத்துவதற்காக டாக்டர்கள் சோதனை செய்து வருகிறார்கள்.

சென்னை,

அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச்செயலாளரான சசிகலாவின் கணவரும், ‘புதிய பார்வை’ ஆசிரியருமான ம.நடராஜன் (வயது 74) கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக கடந்த 9 மாதங்களாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த மாதம் 10–ந்தேதி திடீரென்று அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டனில் உள்ள கிங் மருத்துவ கல்லூரி மற்றும் குளோபல் மருத்துவமனையில் பணியாற்றும் பிரபல கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா தலைமையிலான டாக்டர் குழுவினர் நடராஜனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல் இழந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவருக்கு கல்லீரல், சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். இதற்காக தமிழக அரசின் உறுப்புதான பதிவேட்டில் நடராஜனின் பெயரை பதிவு செய்திருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (22) என்பவர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது 2–ந்தேதி மூளைச்சாவு அடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர்.

அவருடைய கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை நடராஜனுக்கு பொருத்துவதற்காக, கார்த்திகேயன் உடல் தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு ஆம்புலன்சில் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து குளோபல் மருத்துவமனைக்கு உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டது.

அந்த உடலில் உள்ள கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை நடராஜனுக்கு பொருத்த முடியுமா? என்று டாக்டர்கள் சோதனை செய்து வருகின்றனர். நடராஜன் உடல்நிலையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லாமல், தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் கல்லீரல் மாற்று சிகிச்சை அவசரமாக தேவைப்படுகிறது.

தானமாக பெறப்பட்ட கல்லீரலை அவருக்கு பொருத்தும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடியுமா? என்றும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாக டாக்டர்கள் கூறினார்கள்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மருத்துவமனைக்கு வந்து நடராஜனை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

பின்னர் வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘நடராஜன் 52 ஆண்டுகளாக எனக்கு நண்பர். ஈழத்தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர். அவருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டரிடம் நடராஜன் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்து வெற்றிகரமாக மருத்துவமனையில் இருந்து வெளியே வருவார்’’ என்றார்.


Next Story