சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம்: திருநாவுக்கரசர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை,
உத்தரபிரதேச மாநில சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து 7 உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட தாஜ்மகாலை பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளது.
இதை வன்மையாக கண்டிக்கிறேன். சுற்றுலா பயணிகள் கையேட்டில் மீண்டும் தாஜ்மகால் இடம் பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். கட்சி எல்லைகளை கடந்து மதசார்பற்ற சக்திகள் உணர்ந்து தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. வகுப்புவாத சக்திகளை முறியடிப்பதற்கு மதசார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டியது இன்றைய கட்டாயமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி ஆகியோரும் சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.