டெங்கு காய்ச்சல் உயிரிழப்பும் என்னுடைய தூண்டுதலில் நடக்கிறது என்பார்கள் -டிடிவி தினகரன் பேட்டி


டெங்கு காய்ச்சல் உயிரிழப்பும் என்னுடைய தூண்டுதலில் நடக்கிறது என்பார்கள் -டிடிவி தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 4 Oct 2017 1:33 PM IST (Updated: 4 Oct 2017 1:33 PM IST)
t-max-icont-min-icon

தேச துரோக வழக்கை வலிமையாக எதிர்கொள்வேன், முன்ஜாமீன் கேட்க மாட்டேன் என டிடிவி தினகரன் பேசிஉள்ளார்.

சென்னை, 

டிடிவி தினகரன் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்ற எங்களுக்கு சாதகமான தீர்ப்புவரும் என்று எதிர்பார்க்கிறோம். என் மீது இப்போது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இது தொடர்பாக எனது வக்கீல்களுடன் பேசினேன். அந்த நோட்டீஸ் யார் அடித்தது என்று தெரியவில்லை. அதில் எனது படம், பொதுச்செயலாளர் படம், அண்ணா படம், புரட்சித் தலைவர் படம், பெரியார் படம் எல்லாம் இடம் பெற்றுள்ளன. ஆனால் அந்த நோட்டீசில் தேச துரோக வழக்கு போடுவதற்குரிய வார்த்தைகள் இல்லை. 

என் உத்தரவுடன் அந்த நோட்டீஸ் அச்சடிக்கப் பட்டதாக போலீசார் எழுதி வாங்கி உள்ளனர். நாங்கள் நீதிமன்றத்தை அணுகி இந்த வழக்கை போட வைத்தவர்கள் மீதும், எழுதி வாங்கியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

ஒரு கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது படத்தை யார் வேண்டுமானாலும் போட்டு அடிப்பார்கள். அதற்கெல்லாம் வழக்கு போட வேண்டும் என்றால் தினமும் ஒரு வழக்கு போட வேண்டி வரும்.

இதற்காக எல்லாம் நான் முன்ஜாமீன் பெறப் போவதில்லை. ஏனென்றால் இதுவே பின்னர் ஒரு தொழிலாகி விடும். என்னை கைது செய்யட்டும். இந்த வழக்கை பதிவு செய்த போலீசார் மீதும் நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுப்பேன். இதை சாதாரணமாக விட மாட்டேன். ஏனென்றால் தேச துரோக குற்றச்சாட்டு என்பது ஒரு விசாரணை குற்றச்சாட்டு அல்ல. அந்த கவிதையில் அதற்கான வரிகள் இல்லை என்பதுதான் சட்ட நிபுணர்களின் கருத்து. நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இங்கு தான் இருக்கிறேன். எங்கள் எதிரிகளும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களும் சட்டத்தை மீறி எதை வேண்டுமானாலும் தூண்டலாம். அவர்கள் அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுப்போம். 

இந்த ஆட்சியின் ஆட்டம் முடியப் போகிற நிலை வந்துள்ளதால் கோபத்தின் உச்சியில் இருக்கிறார்கள். பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்று சொல்வார்கள். அதன்படி நடந்து கொண்டிருக்கின்றன. நான் பேட்டியிலோ, பொது மேடையிலோ பேசுவது மட்டும்தான் எனது கருத்தாக இருக்க முடியும். முதல்வர் படத்தை நோட்டீசில் போட்டு கூட வழக்குப்பதிவு செய்து என்னால் நடவடிக்கை எடுக்க வைக்க முடியும்.

எனவே இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். இதை யெல்லாம் 30 வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சரியாக நீதிமன்றத்தில் வந்து மாட்டுகிறார்கள். நீதிமன்றம் மூலம் இதில் ஈடுபட்டிருப்பவர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுப்போம். சசிகலா மீண்டும் விண்ணப்பித்து பரோலில் வருவார். பரோல் கிடைக்கும் என்றார். 

குளோபல் ஆஸ்பத்திரியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று டெங்கு காய்ச்சல் உயிரை பறிக்கிறது. என்னுடைய தூண்டு தலில்தான் இது நடக்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சொல்லி வழக்குப்பதிவு செய்யலாம், என் மீது கொலை வழக்கு பதிவும் செய்யலாம். எடப்பாடியிடம் பதவியிருக்கிறது. ஆனால் ஆட்சி செய்ய தகுதி இல்லாத காரணத்தினால்தான் மக்களை திசை திருப்புவதற்கு தினம் ஒரு பொய் சொல்கிறார். பொய் வழக்கும் போடுகிறார். அவர்களுடைய ஆட்சி நிர்வாகம் சரி இல்லை என்பதால் மக்களை திசை திருப்புகிறார்கள். நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து நிச்சயம் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என கூறிஉள்ளார். 


Next Story