டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Oct 2017 12:51 AM IST (Updated: 6 Oct 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி டெங்கு காய்ச்சலை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. டெங்கு காய்ச்சல் 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இரு மாதம் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று வரை அது நடக்கவில்லை. மாறாக டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியிருப்பது கவலையளிக்கிறது.

டெங்கு நிலைமை இந்த அளவுக்கு கைமீறிப் போய்விட்ட நிலையில் தான், தமிழக ஆட்சியாளர்கள் சென்னையில் ஆட்டோவில் சென்று நிலவேம்பு கசாயம் கொடுக்கும் திட்டத்தையும், கொசு ஒழிப்புக்காக ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்த இந்திய பொது சுகாதார சங்கம், தமிழகத்தில் 12,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறிந்துள்ளது.

மருத்துவ அவசர நிலையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும் என்றும் அச்சங்கம் கூறியுள்ளது. மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்துவதன் மூலம் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் நிதியையும், டாக்டர்களையும் பெற முடியும். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு இந்திய பொது சுகாதார அமைப்பு பரிந்துரைத்த போதிலும் ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் டெங்கு உயிரிழப்புகள் தான் அதிகரிக்குமே தவிர நோய்த் தடுப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டு விடாது. எனவே, மருத்துவ வல்லுனர்களின் பரிந்துரைப்படி மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி டெங்கு காய்ச்சலை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story