தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சு.திருநாவுக்கரசர் அறிவிப்பு


தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சு.திருநாவுக்கரசர் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Oct 2017 1:06 AM IST (Updated: 6 Oct 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது என்று சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

சென்னை,

சுதந்திர போராட்ட வீரரும், மறைந்த காங்கிரஸ் தலைவருமான வடக்குப்பட்டு மு.வீரராகவாச்சாரியாரின் நினைவுநாள் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று அனுசரிக்கப்பட்டது. பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவருடைய உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட தலைவர் கள் எம்.எஸ்.திரவியம், ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா உள்பட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியின்போது சு.திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நவோதயா பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். காப்பீட்டு தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு உடனடியாக அதனை வழங்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணமேல் குடியில் இயங்கி வரும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தை மூடக்கூடாது. நரேந்திர மோடியை அகற்றிவிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாளை (இன்று) காலை சென்னை காம ராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சு.திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு ஆண்டுதோறும் புத்தகங்கள் வாங்குகிற நடைமுறை 2014, 2016, 2017-ம் ஆண்டுகளில் பின்பற்றப்படவில்லை. 2015-ம் ஆண்டில் ஆதாயத்தின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் புத்தகங்களுக்கான கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையின் மூலமாக தரமற்ற நூல்கள் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, நல்ல குடிமக்களை உருவாக்குகிற நூலகங்களுக்கு தரமான நூல்களை வெளிப்படைத்தன்மையுடன் வாங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை நூலகத்துறை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story