பரலோலில் வரும் சசிகலாவை வரவேற்க தினகரன் தடபுடல் ஏற்பாடு


பரலோலில் வரும் சசிகலாவை வரவேற்க தினகரன் தடபுடல் ஏற்பாடு
x
தினத்தந்தி 6 Oct 2017 2:24 PM IST (Updated: 6 Oct 2017 2:24 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சென்னை வரும் சசிகலாவை வரவேற்கத் தமிழகம் முழுவதிலுமிருந்து கட்சித் தொண்டர்கள் வரத்தொடங்கிவிட்டனர். பல ஆயிரம் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.


சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

இதற்கிடையே தனது கணவரை பார்ப்பதற்காக 15 நாட்கள் ‘பரோல்’ வழங்குமாறு கேட்டு சசிகலா சார்பில் சிறை அதிகாரிகளிடம் கடந்த 3-ந் தேதி மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதை சரிசெய்து மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்யும்படியும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து சிறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து சசிகலாவின் வக்கீல்கள் நேற்று முன்தினம் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி மீண்டும் புதிய பரோல் மனுவை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். அந்த மனு சரியாக இருப்பதால் அதை ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் சசிகலாவின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக சென்னை போலீசாரிடம் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கருத்து கேட்டு இருந்தனர்.

இதே போல கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சசிகலா பரோலில் செல்ல அனுமதி அளித்தார். மாநில உள்துறை செயலர் பசவராஜ், சிறைத்துறையின் விதிமுறையின்படி சசிகலாவுக்கு பரோல் வழங்கலாம் என பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ஒப்புதல் கடிதத்தை அனுப்பினார்.

சசிகலாவுக்கு பரோல் வழங்குவதற்கு சட்டத்துறை இன்று (அக்.6) ஒப்புதல் அளித்த நிலையில், அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இன்று 18 நிபந்தனைகளுடன்  சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியது கர்நாடக சிறைத்துறை.சசிகலா பெங்களூருவில் இருந்து இன்று மாலையே சென்னை வருகிறார்.  தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் இல்லத்தில் சசிகலா தங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக தினகரன் மற்றும் இளவரசி மகன் விவேக், அவரது மனைவி கீர்த்தனா, ராஜராஜன் ஆகியோர் சசிகலாவை சந்தித்துப் பேசினர்.

சசிகலா விமானம் மூலம் இன்று மாலை 6 மணிக்கு  சென்னைக்கு வருவார் என்று அ.தி.மு.க அம்மா அணியினர் தெரிவித்தனர். சென்னை வரும் சசிகலாவை வரவேற்க கட்சியினர் வரவேண்டும் என்று அ.தி.மு.க அம்மா அணி சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போய் இருக்கிறது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கார்களில் சென்னை விமான நிலையத்துக்கு சசிகலாவை வரவேற்க புறப்பட்டு விட்டார்கள். அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். பெங்களூருவில் இருந்தவாரே சசிகலாவை வரவேற்கும் வேலைகளை டி.டி.வி.தினகரன் கவனித்து வருகிறார். சசிகலாவை வரவேற்க பல ஆயிரம் பேர் வர வேண்டும் என்று கட்சி தலைமையிடம் இருந்து  உத்தரவு போய் இருக்கிறது. 

Next Story