‘தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்’ புதிய கவர்னராக பதவி ஏற்ற பன்வாரிலால் புரோகித் பேட்டி


‘தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்’ புதிய கவர்னராக பதவி ஏற்ற பன்வாரிலால் புரோகித் பேட்டி
x
தினத்தந்தி 7 Oct 2017 5:30 AM IST (Updated: 7 Oct 2017 12:08 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் புதிய கவர்னராக பதவி ஏற்ற பன்வாரிலால் புரோகித் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று கூறினார்.

சென்னை,

தமிழக கவர்னராக பணியாற்றி வந்த ரோசய்யாவின் பதவி காலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதியோடு நிறைவடைந்தது. இதையடுத்து மராட்டிய மாநில கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.

இந்தநிலையில் அசாம் மாநில கவர்னராக பணியாற்றி வந்த பன்வாரிலால் புரோகித்தை தமிழகத்தின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த 30-ந்தேதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் சென்னை வந்தார். நேற்று காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு பந்தலில் பதவி ஏற்பு விழா நடந்தது.

விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கவர்னர் நியமனம் குறித்த உரிமை ஆணையை வாசித்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவி ஏற்பு உறுதிமொழியை வாசிக்க, பன்வாரிலால் புரோகித் அதை படித்து கவர்னராக பதவி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து உறுதிமொழிப் படிவத்தில் தலைமை நீதிபதியும், புதிய கவர்னரும் கையெழுத்திட்டனர்.

தலைமை நீதிபதி, புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அவருடைய மனைவி புஷ்பா புரோகித் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி பூச்செண்டு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கவர்னருக்கும், அவருடைய மனைவிக்கும் பொன்னாடை போர்த்தி, பூச்செண்டு வழங்கி வாழ்த்து கூறினார்கள்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு நீதிபதிகளை அறிமுகம் செய்துவைத்தார்.

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சபாநாயகர் பி.தனபால், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இல.கணேசன் எம்.பி., தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத்தலைவர் வானதி சீனிவாசன், தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முப்படை அதிகாரிகள், வெளிநாடுகளைச் சேர்ந்த துணைத்தூதர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், நடிகை சுகாசினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பன்வாரிலால் புரோகித்துக்கு பொன்னாடை போர்த்தி பூச்செண்டு வழங்கினார்கள்.

பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அரசியல் சாசனத்தை கட்டிக்காப்பதுடன், அதுபடி நடப்பேன். சிறியதோ, பெரிய விவகாரமோ சட்டப்படியே செயல்படுவேன். அரசியல் ரீதியாக எதையும் அணுக மாட்டேன். குறிப்பாக கவர்னர் மாளிகையில் எடுக்கப்படும் முடிவுகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு தான் இருக்கும்.

அதேபோல் அரசு செயல்படுத்தும் வளர்ச்சி திட்டங்களுக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பேன். தகுதியின் அடிப்படையில் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவேன்.

டெல்லியில் எனக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். தமிழகத்துக்கு கூடுதல் நிதி கிடைப்பதை உறுதி செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்; அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழகத்திற்கு எது நன்மை பயக்குமோ அதை புதிய கவர்னர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story