‘வாக்கி-டாக்கி’ கொள்முதலில் ரூ.88 கோடி முறைகேடு:சுதந்திரமான விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை


‘வாக்கி-டாக்கி’ கொள்முதலில் ரூ.88 கோடி முறைகேடு:சுதந்திரமான விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Oct 2017 3:00 AM IST (Updated: 7 Oct 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

‘வாக்கி-டாக்கி’ கொள்முதலில் ரூ.88 கோடி முறைகேடு:சுதந்திரமான விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை,

‘வாக்கி-டாக்கி’ கொள்முதலில் ரூ.88 கோடி முறைகேடு நடந்தது குறித்து, சுதந்திரமான விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், “தமிழக அரசு வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவித்து இருப்பதை வரவேற்கிறேன்.

கவர்னர் இதுபோன்று கூறியிருக்கின்ற நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பணிகளுக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் மிக முக்கியமான தொடர்பு சாதனமாக திகழும் ‘வாக்கி-டாக்கி’ கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

செய்திகள் வெளிவந்து 3 தினங்கள் கடந்தும், இதுவரை காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காத்து, ‘குட்கா’வில் தொடர்புடைய அதிகாரிக்குப் பதவி உயர்வு கொடுத்தது போல், இப்போது ‘வாக்கி- டாக்கி’ முறைகேடுகளையும் போர்வை போட்டு மூடப்பார்ப்பது வேதனைக்குரியது.

இந்த முறைகேடு குறித்த கேள்விகளை எழுப்பியிருப்பது எதிர்க்கட்சிகள் அல்ல, மாநில உள்துறைச் செயலாளராக இருக்கும் நிரஞ்சன் மார்டி. அவர் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், டெண்டர் முறைகேடுகளை சுட்டிக்காட்டி, அதன் நகலை முதல்-அமைச்சருக்கும், தலைமைச் செயலாளருக்கும் அனுப்பியிருக்கிறார்.

இப்படி, மக்களின் பாதுகாப்பிற்காக வாங்கப்படும் “வாக்கி-டாக்கி” கொள்முதல் டெண்டர் முறைகேடுகளுக் குக் காரணமான டி.ஜி.பி.யை பாதுகாக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துடிப்பது ஏன்?. இந்த முறைகேடுகள் மீது விசாரணை நடத்தவோ, அல்லது முறைகேடு நடக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ முன்வராத முதல்-அமைச்சர், ரூ.88 கோடி டெண்டர் ஊழல் குறித்து கேள்வி எழுப்பிய உள்துறைச் செயலாளரை மாற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மெகா முறைகேட்டில் இருந்து தப்பித்துக்கொள்ள சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யும், மாநில உளவுத்துறை ஐ.ஜி.யும் கூட்டணி அமைத்து, ஊழலை தட்டிக்கேட்ட உள்துறைச் செயலாளரை மாற்றவேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்து வருவதாகவும் தெரியவருகிறது. ஊழலை தட்டிக்கேட்ட உள்துறைச் செயலாளரை மாற்ற, ஒரு டி.ஜி.பி. தலைமையிலேயே அணி அமைத்து செயல்படுவது, ‘வெளிப்படையான நிர்வாகத்திற்கும், தமிழக காவல்துறை அதிகாரிகளை வழிநடத்தும் டி.ஜி.பி.க்கும் துளிகூட சம்பந்தம் இல்லை’ என்பதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது.

“வெளிப்படையான நிர்வாகத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ள கவர்னர் தனது முதல் பேட்டியிலேயே கூறியிருக்கின்ற நிலையில், காவல்துறைக்கு ‘வாக்கி- டாக்கி’ கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள ரூ.88 கோடி முறைகேடு குறித்து, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் ஒரு சுதந்திரமான விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படும் வாக்கி- டாக்கி ஒப்பந்த முறைகேடு மீதான விசாரணை முடியும் வரை, சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பொறுப்பில் இருந்து டி.கே.ராஜேந்திரனை விடுவிக்கவும் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story