கவர்னர் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு அவமரியாதையா?


கவர்னர் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு அவமரியாதையா?
x
தினத்தந்தி 7 Oct 2017 4:15 AM IST (Updated: 7 Oct 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் அவமரியாதை செய்யப்பட்டதாக தி.மு.க.வினர் புகார் கூறினர்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. பதவி ஏற்றதும் கவர்னருக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அவரைத் தொடர்ந்து துணை முதல்-அமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர்களை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு வாழ்த்து தெரிவிக்க தனது இருக்கையில் இருந்து எழுந்து மேடைநோக்கி சென்றார்.

அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர் மு.க.ஸ்டாலினிடம், ‘நீங்கள் இப்போது செல்லக்கூடாது, நீதிபதிகள் வாழ்த்து தெரிவித்த பிறகு தான் நீங்கள் மேடைக்கு வரவேண்டும்’ என்றார்.

அதற்கு மு.க.ஸ்டாலின், ‘அப்படியென்றால், நீதிபதிகள் வாழ்த்து தெரிவித்த பிறகுதானே அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். அந்த நடைமுறை ஏன் மீறப்பட்டது. அமைச்சர்களுக்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சித் தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது’ என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

மு.க.ஸ்டாலின் கோபப்பட்டு புறப்பட தயாரானதை பார்த்த தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விரைந்து சென்று அவரை சமாதானப்படுத்தி மேடைக்கு அழைத்துச் சென்றார். அதிகாரிகளிடமும் எதிர்க்கட்சித் தலைவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ஏன் பின்பற்றவில்லை? என்று கேட்டார்.

உடனடியாக அதிகாரிகள் மு.க.ஸ்டாலினை வாழ்த்து தெரிவிக்க அனுமதித்தனர். அவரும் மேடைக்கு சென்று கவர்னருக்கு பொன்னாடை போர்த்தி, பூச்செண்டு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மு.க.ஸ்டாலினுடன் வந்த முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ.வேலு, ரகுபதி, ஆர்.எஸ்.பாரதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், மாதவரம் சுதர்சனன், ஜெ.அன்பழகன் ஆகியோரும் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்தனர். மு.க.ஸ்டாலினுக்கு உரிய மரியாதை அளிக்காமல், அவமரியாதை செய்துவிட்டதாக தி.மு.க.வினர் கூறினர்.

Next Story