மாநகராட்சி அதிகாரி மகன் உள்பட டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 14 பேர் சாவு


மாநகராட்சி அதிகாரி மகன் உள்பட டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 14 பேர் சாவு
x
தினத்தந்தி 7 Oct 2017 2:45 AM IST (Updated: 7 Oct 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலுக்கு மாநகராட்சி அதிகாரி மகன் உள்பட ஒரே நாளில் 14 பேர் இறந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி நகரமைப்பு அதிகாரியாக பணிபுரிபவர் உதயகுமார். இவருடைய மகன் நந்தகுமார் (வயது 21). என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நந்தகுமார் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

திண்டுக்கல் அருகே உள்ள கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் தனராஜ். இவருடைய மகன் ஆல்பர்ட் (13). 8-ம் வகுப்பு படித்து வந்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஆல்பர்ட் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் டி.பஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மகள் பூஜா (9), மதுரை மாவட்டம் பாலமேட்டை சேர்ந்த அன்பு மகள் மேனகா (12) ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று 2 சிறுமிகளும் இறந்தனர்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்த குமரேசன் மகள் சுபஸ்ரீ (7), நாமக்கல்லை சேர்ந்த சாகுல் மகள் பல்கீஸ் (10) ஆகியோர் காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுமி சுபஸ்ரீ இறந்தாள். சிறுமி பல்கீஸ் நேற்று மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த மணியன் மகள் தரண்யா (10), திருப்பூரை சேர்ந்த ராஜேஷ் மகள் சத்யவதி (8), கோவை ஆலாந்துறையை சேர்ந்த கருப்பசாமி மகள் பிரியாஹாசினி (6) ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி 3 சிறுமிகளும் இறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் பொய்க்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள் (27). டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட கன்னியம்மாள் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் வீரனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் வினித்ரா (19). லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வந்தார். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே இறந்தார்.

திருப்பூர் மாவட்டம் கே.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வாணிஸ்ரீ (20). காய்ச்சல் காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் நிக்கோபர். ஆட்டோ மெக்கானிக். இவருடைய 8 மாத பெண் குழந்தை மரியநிக்கிதா. இந்த குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தது. இதனால் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ரத்த வாந்தி எடுத்து இறந்தது.

ஈரோடு முத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஹையதுநிஷா (34). டெங்கு காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

Next Story