குடிபோதையில் காரை ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்
குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
ஆலந்தூர்,
சென்னை அடையாறு மேம்பாலத்தில் கடந்த 21–ந் தேதி குடிபோதையில் நண்பர்களுடன் காரில் வந்த நடிகர் ஜெய் மேம்பால சுவரில் மோதி விபத்து ஏற்படுத்தினார். இது பற்றி அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 4–வது கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. கடந்த 3–ந் தேதி கோர்ட்டில் ஆஜரான ஜெய் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார்.
பின்னர் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு ஜெய் ஆஜராகவில்லை. இதனால் வருகிற 10–ந் தேதிக்குள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி பிடிவாரண்டு பிறப்பித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அடையாறில் உள்ள நடிகர் ஜெய் வீட்டிற்கு போலீசார் சென்றபோது அவர் வீட்டில் இல்லை. படப்பிடிப்புக்கு அவர் எங்கேயோ சென்று விட்டதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக கூடும் என தகவல்கள் பரவிய நிலையில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. 10–ந் தேதிக்குள் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் ஜெய் ஆஜர் ஆனார்.
Related Tags :
Next Story