முதல்–அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு ஏன் சேர்க்கப்படவில்லை?
முதல்–அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு நோய் ஏன் சேர்க்கப்படவில்லை? என ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–
டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் பலர் உயிரிழந்து வருகின்றனர். டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பது இல்லை.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது.
இது குறித்து கேட்டபோது, டெங்கு நோய் முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்படவில்லை என்று தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் பதில் அளிக்கின்றன.
எனவே, முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவச சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்.
பருவமழைக்கு முன்பாக நீர்நிலைகளை தூர்வாரி வெள்ள பாதிப்பை தடுப்பதற்கும், தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றி தொற்று நோய் வராமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு நோய் ஏன் சேர்க்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவை ஒழிக்கவும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் நதி, அடையாறு ஆகியவற்றை சுத்தப்படுத்தவும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்பது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பின்னர், வழக்கு விசாரணையை வருகிற 12–ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.