எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான செலவு தொகையை டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு செலவிடலாம்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான செலவு தொகையை டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு செலவிடலாம்
x
தினத்தந்தி 10 Oct 2017 3:45 AM IST (Updated: 10 Oct 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு செலவிடும் பணத்தை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடலாம் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் யோசனை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் 400 பேருக்கு மேல் இறந்துள்ளார்கள். இதை அரசு மறைக்கிறது. ஆரம்ப சுகாதார மையங்களிலும், அரசு கல்லூரி மருத்துவமனைகளிலும், சுமார் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களை, டெங்கு காய்ச்சல் என்று சொல்லாமல், மர்ம காய்ச்சல் என்று தவறான தகவலை மக்களிடத்தில் பரப்பி வருகிறார். டாக்டர்களோ டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுத்தான் இறந்துள்ளார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

இதை கவனிக்க வேண்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களை பற்றி கவலைப்படாமல் மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க. அறக்கட்டளையில் இருந்து செலவு செய்யாமல், மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி ஆடம்பர விழாக்களாக கொண்டாடி வருகிறார்கள். இதற்கு செய்கின்ற செலவை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவாக செய்திருக்கலாம்.

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அனைவரும், தங்கள் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்து, அவர்களுக்கு உரிய உதவிகளை செய்து, டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story