இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் கட்டுப்பாட்டில் உள்ளது: அரக்கோணத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேச்சு


இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் கட்டுப்பாட்டில் உள்ளது:  அரக்கோணத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேச்சு
x
தினத்தந்தி 10 Oct 2017 3:45 AM IST (Updated: 10 Oct 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் கட்டுப்பாட்டில் உள்ளது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

அரக்கோணம்,

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தை அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய பேரிடர் மீட்பு படை பயிற்சி மையம் உள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு பிரிவுகளில் 120 பெண்கள் உள்பட 1,043 பேர் பயிற்சி பெற்று வந்தனர். நேற்று அவர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடந்தது.

விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு திறந்த ஜீப்பில் சென்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டார். பின்னர் உதவி கமாண்டன்ட் பிரிவில் சிறந்து விளங்கிய பிரசாத், சப்-இன்ஸ்பெக்டர் பிரிவில் சிறந்து விளங்கிய ராமமூர்த்தி கொண்டல், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிரிவில் சிறந்து விளங்கிய விகாஸ்பால் ஆகியோருக்கு சான்றிதழ், கோப்பை மற்றும் உதவி கமாண்டன்ட் பரோல் போராஷாவிற்கு கவுரவ வாள் வழங்கினார்.

பின்பு விழாவில் ராஜ்நாத்சிங் பேசியபோது கூறியதாவது:-

மத்திய பாதுகாப்பு படையினர் நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்தவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் கடுமையாக பணியாற்ற வேண்டும். இவர்களின் பணி உலக அளவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. பன்முகதிறன் கொண்டவர்களாக திகழ்ந்து வருகிறார்கள். நாடு முழுவதும் தற்போது ஒரே நேரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையங்களில் 20 ஆயிரம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சியை நிறைவு செய்துள்ள வீரர்கள் விமான நிலையம், அனல்மின் நிலையங்கள் உள்பட பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நமது நாடு 2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் 3-வது இடத்தை பிடிக்கும். ஆனால் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் நமது பொருளாதாரத்தை சீர்குலைக்க விரும்புகின்றன.

பல்வேறு நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிக அளவில் இருந்து வந்தபோதிலும், இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களின் பங்கு அதிகம். வீரர்களின் சீருடை அளவுகள் தொடர்பாக புகார்கள் வருவதால் இனி ஒவ்வொரு வீரர்களுக்கும் சீருடைக்காக ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படும். அவர்கள் தங்களின் அளவுகளுக்கேற்ப சீருடைகளை தயார் செய்து கொள்ளலாம்.

வீரமரணம் அடையும் வீரர்களின் குழந்தைகளின் கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை புரிய மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தனி அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. வீரர்களின் குறைகளை போக்குவதற்காக மொபைல் செயலி என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவித்தால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கப்பட உள்ளது. அதற்காக மாதிரி பயிற்சிகள் வீரர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. பாதுகாப்பு துறையில் நாங்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.  இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

விழாவில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்குபவர்களை எவ்வாறு மீட்பது, குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்படும் இடங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் செய்து காட்டினர். மேலும், இங்கு உள்ள பாதுகாப்பு கருவிகளையும் ராஜ்நாத்சிங் பார்வையிட்டார்.

இந்த விழாவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குனர் ஓ.பி.சிங்., ஐ.ஜி. ஜக்பீர்சிங், டி.ஐ.ஜி. காமோ மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள், மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்குடன் ‘செல்பி’ எடுத்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Next Story