ரவுடி ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவர தடையில்லா சான்று வழங்க வேண்டும்
கம்போடியாவில் இறந்த ரவுடி ஸ்ரீதரின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு 24 மணி நேரத்தில் தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி, தனது தந்தையின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஸ்ரீதரின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கும்படி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட்டது. மீண்டும் நேற்று அந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஸ்ரீதரின் பாஸ்போர்ட் 2015–ம் ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளால் முடக்கப்பட்டது. அவர் இலங்கை நாட்டின் குடிமகன் என்று கூறி அங்குள்ள பாஸ்போர்ட் மூலமாக கம்போடியா சென்றுள்ளார். எனவே, ஸ்ரீதரின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு தான் கம்போடியா அரசு அனுமதி வழங்கும்.
அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சட்டசிக்கல்கள் உள்ளன. இருந்தாலும் இந்தியாவுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது’ என்றார்.
அப்போது நீதிபதி, ‘ஸ்ரீதருக்கு ஏற்கனவே இந்திய அரசும் பாஸ்போர்ட் வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டுவர முடியாதா?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளிடம் உடனடியாக கேட்டு தெரிவிக்கும்படி கூறி விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.
மீண்டும் பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு வக்கீல், ஸ்ரீதரின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப கம்போடியா அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஸ்ரீதரின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர தடையில்லா சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு 24 மணி நேரத்துக்குள் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் உடலை காஞ்சீபுரத்துக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.