டெங்கு பாதிப்பு 2-வது நாளாக மத்திய குழுவினர் சேலம், செங்கல்பட்டில் ஆய்வு
டெங்கு பாதிப்பு குறித்து 2-வது நாளாக மத்திய குழுவினர் சேலம், செங்கல்பட்டில் ஆய்வு நடத்துகிறது.
டெங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய அரசின் மருத்துவ குழுவினர், இன்று சேலத்தில் ஆய்வு நடத்த உள்ளனர். தமிழகத்தில் டெங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் அடங்கிய மத்திய அரசின் மருத்துவ குழுவினர் வெள்ளிக்கிழமை சென்னை வந்தனர்.
முதலாவதாக, சுகாதார துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில், சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்தை தொடர்ந்து, சென்னை அரசு பொது மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள், குழந்தைகளின் குறைகளை கேட்டறிந்தனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து, அக்குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து, அதில் ஒரு குழுவினர் வளசரவாக்கம் பகுதியிலும், மற்றொரு குழுவினர் போரூர் தனியார் மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு கடந்த 3 மாதங் களாக மிக அதிக அளவில் உள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை 55-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் காய்ச்சல் அதிகம் பாதித்த பகுதிகளையும், சேலம் அரசு ஆஸ்பத்திரியையும் ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று இரவு சேலம் வந்தது. அந்த குழுவில் டெல்லி கே.எஸ்.சி.எச். மற்றும் எல்.எச். எம்.ஜி.குழும மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறை இணை பேராசிரியர் டாக்டர் சுவாதி டுப்ளிஸ், பூச்சியல் வல்லுனர் வினய் கார்க், தேசிய தொற்று நோய் தடுப்பு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் கவுசல் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதே போல மாநில அதிகாரிகளான எய்ட்ஸ் கட்டுப்பாட்டு செயலர் செந்தில்ராஜ், பொது சுகாதார கூடுதல் இயக்குனர் டாக்டர் வடிவேல், டாக்டர்கள் இன்பசேகரன், உமா ஆகியோரும் அதில் உள்ளனர்.
இந்த குழுவினர் ஓமலூர் பகுதியில் இன்று ஆய்வை தொடங்கினர். அங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சல் பரவுவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்கிறார்கள். பின்னர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடுகிறார்கள்.
பின்னர் சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் மருத்துவ குழுவினர் அங்கு டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வார்டு மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டையும் பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார்கள். அப்போது காய்ச்சல்சாவை தடுக்க இனி வரும் நாட் களில் எடுக்க வேண்டிய நடிவடிக்கைகள் குறித்தும் டாக்டர்களுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார்கள்.
ஒரு குழு செங்கல்பட்டு பகுதியிலும் ஆய்வு நடத்துகிறது.
Related Tags :
Next Story