அமைச்சருக்கு எதிராக புகார் கொடுத்தவர் போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்


அமைச்சருக்கு எதிராக புகார் கொடுத்தவர் போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்
x
தினத்தந்தி 15 Oct 2017 3:45 AM IST (Updated: 15 Oct 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு எதிராக மோசடி புகார் கொடுத்தவர், விசாரணைக்காக போலீஸ் முன்பு ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.குமார். இவர், தமிழக உணவு அமைச்சர் காமராஜ், அவரது உறவினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது மன்னார்குடி போலீசில் புகார் செய்தார். அதில், தன்னிடம் ரூ.30 லட்சம் வாங்கிக்கொண்டு மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தை திருப்பிக்கேட்டால், அமைச்சரும், ராமகிருஷ்ணனும் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதுகுறித்து எஸ்.வி.எஸ்.குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அமைச்சர் காமராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், ஐகோர்ட்டில் குமார் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும், அதன்பின்னர் புலன் விசாரணையை நடத்தாமல் வழக்கை கிடப்பில் போட்டுவிட்டனர். எனவே, இந்த வழக்கை மன்னார்குடி போலீஸ் விசாரணையில் இருந்து, சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல், ‘வழக்கு குறித்து விசாரிக்க நேரில் ஆஜராகும்படி புகார்தாரர் குமாருக்கு போலீசார் 4 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி, ‘வருகிற 23–ந் தேதி விசாரணைக்காக போலீஸ் முன்பு மனுதாரர் ஆஜராக வேண்டும். பின்னர், இந்த வழக்கில் இதுவரை நடந்த புலன் விசாரணை விவரங்களை மன்னார்குடி போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 27–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.


Next Story