தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது தாமதம் ஆகிறதா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது தாமதம் ஆகிறதா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
x
தினத்தந்தி 15 Oct 2017 9:25 AM IST (Updated: 15 Oct 2017 9:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது தாமதம் ஆகிறதா? என்ற கேள்விக்கு வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.



சென்னை, 

தென்மேற்கு பருவமழை கேரளா, ராயலசீமா மற்றும் உள் கர்நாடகா பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது தாமதம் ஆகிறதா? என்ற கேள்விக்கு வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 15–ந்தேதி (இன்று) காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் 2 நாட்களுக்குள் அந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த தாழ்வுநிலை வலுப்பெற்று ஒடிசா மற்றும் வட ஆந்திராவில் தாழ்வுமண்டலமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு திசையில் இருந்து வரும் காற்று ஓய்ந்து, வங்கக்கடல் பகுதியில் வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து கருமேகங்களுடன் கூடிய காற்று வீசும்போது தமிழகத்தில் 1 அல்லது 2 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்தால் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20–ந்தேதி முதல் 25–ந்தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் ஏற்படும். ஆனால் வருகிற 19–ந்தேதி ஒடிசா மற்றும் வட ஆந்திராவை ஒட்டிய பகுதியில் தாழ்வு மண்டலம் உருவாகுவதால் அங்கு தான் மழை இருக்கும். 

எனவே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவது தாமதம் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. இப்போது உள்ள சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் (நவம்பர்) தொடக்கத்திலோ தான் தொடங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இயற்கையை நாம் எளிதாக கணித்துவிட முடியாது. இன்னும் 2 நாட்கள் பொறுத்து இருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், பையூர் 6 செ.மீ., சின்னக்கலார் 5 செ.மீ., அரவக்குறிச்சி 4 செ.மீ., சமயபுரம், கோவை, ஓசூர், மாயனூர், திருவாரூர், உடுமலைப்பேட்டை, உத்தமபாளையம், பரூரில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.


Next Story