டெங்கு ஒழிப்பில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது; விஜயகாந்த் குற்றச்சாட்டு
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை,
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் வருகிறது. அதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
டெங்கு இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு டெங்கு ஒழிப்பதில் தோல்வி அடைந்துள்ளது. டெங்கு பாதிப்பை ஆய்வு செய்வதற்காக வந்துள்ள மத்திய குழு காலதாமதமாக வந்துள்ளது. மத்திய குழு டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளதாக தான் சொல்வார்கள்.
அரசு மருத்துவமனையில் பிளீச்சிங் பவுடர் மூலம் சுத்தம் செய்து வைத்துள்ளனர். இதே போல் எல்லா நாட்களிலும் மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தெரிவிப்போம். டெங்குவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.