தியேட்டர்களில் நாளை முதல் டிக்கெட் கட்டணம் உயர்வு தீபாவளி படங்களுக்கு அமலாகிறது


தியேட்டர்களில் நாளை முதல் டிக்கெட் கட்டணம் உயர்வு தீபாவளி படங்களுக்கு அமலாகிறது
x
தினத்தந்தி 17 Oct 2017 3:45 AM IST (Updated: 17 Oct 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

தியேட்டர்களில் நாளை முதல் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

சென்னை,

தியேட்டர்களில் நாளை முதல் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தீபாவளிக்கு வெளியாகும் 3 படங்களுக்கு இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது.

தியேட்டர்களில் சினிமா கட்டண உயர்வு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே 100 ரூபாய்க்கு மேற்பட்ட சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் ரூ.100-க்கு குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி விதித்து உள்ளது. தமிழக அரசும் 8 சதவீதம் கேளிக்கை வரி விதித்து உள்ளது.

ஆரம்பத்தில் 30 சதவீதமாக அறிவிக்கப்பட்ட இந்த கேளிக்கை வரி விகிதம் திரையுலகினர் எதிர்ப்பால் 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதையும் திரையுலகினர் ஏற்க மறுத்ததால் மேலும் 2 சதவீதம் குறைத்து 8 சதவீதமாக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் தமிழக அரசு சினிமா டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் 150 ரூபாயாகவும் குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. குளிர்சாதன வசதி உள்ள தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.100 ஆகவும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதுபோல் குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.80 என்றும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி வரியை ஏற்கனவே கட்டணத்தில் சேர்த்து விட்டனர். கேளிக்கை வரி 8 சதவீதமும் அரசு அறிவித்துள்ள புதிய கட்டண விகிதங்களும் புதிதாக சேர்க்கப்படுகிறது.

நாளை முதல் இந்த மூன்று வகை கட்டணங்களாலும் டிக்கெட் விலை கணிசமாக உயர்கிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அரசு அறிவித்துள்ள அதிகபட்ச கட்டணம் 150 ரூபாயுடன் ஜி.எஸ்.டி, கேளிக்கை வரியையும் சேர்த்து ரூ.206 புதிய கட்டணமாக வசூலிக்கப்படும்.

குளிர்சாதன வசதி உள்ள திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணம் 127 ரூபாய் 44 காசுகளும் குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் 101 ரூபாய் 95 காசும் வசூலிக்கப்படும்.

இதுகுறித்து திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, சினிமா டிக்கெட் கட்டண உயர்வு குறித்து அரசாணை வந்ததை தொடர்ந்து நாளை முதல் புதிய டிக்கெட் கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது. தமிழக அரசு விதித்துள்ள 8 சதவீதம் கேளிக்கை வரிக்கு ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டுமா என்பது குழப்பமாக உள்ளது. அதற்கும் இன்று விடை கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கிறோம். கேளிக்கை வரிக்கும், ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டால் டிக்கெட் கட்டணம் மேலும் சிறிதளவு கூடும்” என்றார்.

Next Story