வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்


வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 17 Oct 2017 3:08 PM IST (Updated: 17 Oct 2017 3:08 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

சென்னை, 

தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த 3 மாதமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மட்டும் அல்லாது தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

மேலும் ஆந்திரா-கர்நாடகா பகுதியில் வளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்ச்சியால் அந்த மாநிலங்களில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

சென்னையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக அளவு மழை கிடைக்கும். தற்போது வெப்பசலனம் காரணமாக சென்னையின் சுற்றுப்புறங்களில் பலத்த மழை பெய்கிறது. சென்னை நகரில் அவ்வப்போது லேசான மழை பெய்கிறது. 

இந்த நிலையில் வடமேற்கு வங்க கடல் பகுதியில் தென் மேற்கு பருவமழை காலம் முடிந்துவிட்டது. இதேபோல் அரபிக்கடல் பகுதியிலும் தென்மேற்கு பருவமழை முடிவடைந்தது. படிப்படியாக மற்ற இடங்களிலும் தென்மேற்கு பருவமழை வாபஸ் ஆகிறது. எனவே அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்ட மேலடுக்கு சுழற்சியால் ஆந்திரா-ஒடிசா கடல் பகுதியில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்த புயல் சின்னமானது வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியில் பலத்த மழை பெய்யும்.

புயல் சின்னம் ஒடிசா நோக்கிச் செல்வதால் தமிழகத்துக்கு புயல் பாதிப்பு இருக்காது. அதேசமயம் கடல் சீற்றம் காணப்படும். அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் பலத்தமழை பெய்யும். 19-ந்தேதி காலை 8.30 மணிவரை பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Next Story