அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு விதித்த தடை நீட்டிப்பு ஐகோர்ட்டு உத்தரவு


அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு விதித்த தடை நீட்டிப்பு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 Oct 2017 3:00 AM IST (Updated: 21 Oct 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயன கலப்படம் உள்ளதாக கடந்த மே மாதம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இதையடுத்து, ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகவும், அவரிடம் இருந்து ரூ.1 கோடி இழப்பீடு கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதாரம் இன்றி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பாக அமைச்சர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘எம்.எல்.ஏ. என்ற முறையிலும், அமைச்சர் என்ற முறையிலும் பால் கலப்படம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கருத்து தெரிவித்தேன்.

ஒரு பொது ஊழியர் என்ற முறையில் கடமையை செய்துள்ளேன். இதற்கு முழு உரிமை எனக்கு உள்ளது. இதற் காக என் மீது சிவில் வழக்கு தொடர முடியாது. மேலும் என்னை மிரட்டும் விதமாகவே தனியார் பால் நிறுவனங்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளன. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். அதில், ‘வழக்கு முடியும் வரை 3 பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் பேச விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது.

ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் உரிய முடிவு எடுக்க ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை பால் நிறுவனங்கள் தங்கள் பாலின் தரம் குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story