நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்கள் விபரீத கருத்துகள் தெரிவிப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்
நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்கள் விபரீத கருத்துகள் தெரிவிப்பதை உடனே பிரதமர் நரேந்திரமோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘‘விவசாயத்தை மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்ல வேண்டும்’’ என்ற நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் பேட்டிக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.65 ஆண்டுகாலம் இருந்த திட்டக்குழுவை கலைத்து விட்டு 2015–ல் ‘நிதி ஆயோக்’ அமைப்பை ஏற்படுத்தியபோது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முன்வைத்த முழக்கம் ‘கூட்டுறவு கூட்டாட்சி’.
நிதி ஆயோக் அமைத்த மத்திய அரசின் அமைச்சரவை தீர்மானத்தில் இதன் நோக்கம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் 13 நோக்கங்களில் ஒன்று, ‘‘வலுவான மாநிலங்கள் சேர்ந்துதான் வலுவான நாட்டை உருவாக்க முடியும்’’ என்று கூறிவிட்டு, இன்றைக்கு மாநிலங்களை மாநகராட்சிகளாகவும், நகராட்சிகளாகவும் தரம் தாழ்த்தும் அளவிற்கு மாநிலங்களிடம் உள்ள ஒவ்வொரு அதிகாரமாக பறித்துக்கொள்ள மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு இந்த ‘நிதி ஆயோக்’ அமைப்பை பயன்படுத்துவது மிகவும் வேதனையளிக்கிறது.
மாநிலங்களின் பட்டியலில் (வரிசை எண் 14) விவசாயம் இருப்பதால்தான் இன்றைக்கு நாட்டில் உள்ள 45.7 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மிகப்பெரிய துறையாக வளர்ந்து நிற்கிறது. குறிப்பாக விவசாய கூலித் தொழிலாளர்கள் வியர்வை சிந்தி உருவாக்கியிருக்கின்ற இந்த வேளாண்துறை நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆணிவேராக திகழ்கிறது.விவசாயத்துக்கு வாங்கிய வங்கிக் கடன்களை அடைக்க முடியாமல் துடித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கைப் பற்றி கவலைப்படாத மத்திய அரசு, விவசாயிகளின் தற்கொலையை வேடிக்கை பார்த்து அது மாநில அரசின் பொறுப்பு என்று தட்டிக்கழித்த மத்திய அரசு ‘வேளாண் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு பணிக்குழுவை’ அமைத்து, வேளாண் அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக்கொள்ள முயற்சிப்பது மாநிலங்களை வஞ்சிக்கும் செயலாகும்.
பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் அமைப்பின் 21–4–2017 அன்று நடைபெற்ற 3–வது ‘நிர்வாக குழு’ கூட்டத்தில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டார். ஒருவேளை ‘நீட்’, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது’ உள்ளிட்ட உரிமைகளை மத்திய அரசிடம் தாரை வார்த்ததுபோல் ‘‘விவசாயத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று ரகசியமாக கூட்டத்தில் கூறிவிட்டுத் திரும்பி விட்டாரா முதல்–அமைச்சர் என்ற சந்தேகம் எழுகிறது.ஏனென்றால் நிதி ஆயோக் அமைப்பின் பணிக்குழு அறிக்கையிலோ, இதுவரை மாநிலங்கள் கொடுத்துள்ள பரிந்துரைகளிலோ இல்லாத ஒரு விஷயத்தை, அதாவது ‘‘விவசாயத்தை மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்’’ என்ற கருத்தை நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
சமூகநீதி கொள்கைகளிலும், கூட்டாட்சி தத்துவத்திலும் குறுக்கிடும் வகையில் ‘நிதி ஆயோக்’ அமைப்பில் உள்ள உறுப்பினர்களும், துணை தலைவரும் விபரீதமான கருத்துக்களை தெரிவிப்பதை அதன் தலைவர் என்ற முறையில் பிரதமர் நரேந்திரமோடி உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.‘கூட்டுறவு கூட்டாட்சி முழக்கத்தை’ மறந்து, மாநில உரிமைகளை பறிப்பதற்கு நிதி ஆயோக் அமைப்பை பயன்படுத்துவதுதான் நோக்கம் என்றால், அதன் நிர்வாக குழுவில் மாநிலங்களின் முதல்–அமைச்சர்களும் உறுப்பினர்களாக இடம்பெறுவதில் துளிகூட அர்த்தமில்லை என்பதை உணர்ந்து, நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களை அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.