டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளை தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்


டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளை தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 23 Oct 2017 10:15 PM IST (Updated: 24 Oct 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளை தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அமிலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட ‘ரம்’ வகை மதுவை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் அதன் தரத்தை ஆய்வு செய்யக்கோரி உணவுப் பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார். அத்துறையின் அதிகாரிகள் அந்த மதுப்புட்டியை தஞ்சாவூரில் உள்ள உணவுப் பொருட்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்துள்ளனர். மற்றொருபுறம் அதே மது வகையை மாநில தடய அறிவியல் துறையும் ஆய்வு செய்திருக்கிறது.

இரு ஆய்வு முடிவுகளும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கின்றன. ‘ரம்’ மதுவில் குறைந்தபட்ச தரம்கூட இல்லை என்பதும், அதில் டார்டாரிக் அமிலம், அசிட்டிக் அமிலம், எத்தில் அசிடேட் ஆகிய வேதிப்பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றால் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் அனைத்தும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகின்றன. அதுமட்டுமின்றி, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவகைகளை தர ஆய்வுக்கு உட்படுத்துமாறு 8–7–2015 அன்று சென்னை ஐகோர்ட்டு ஆணையிட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் மதுக்கடைகள் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான 14 ஆண்டுகளில் ஒருமுறை கூட மது வகைகளின் தரம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படாதது துரதிர்ஷ்டவசமானது.

உணவுப் பாதுகாப்பு ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி பெ.அமுதா நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது தர ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் தொடர்ந்து மக்களின் உயிரை பறிப்பதை அனுமதிக்கக்கூடாது.

உடனடியாக அனைத்து மது வகைகளையும் தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கெல்லாம் மேலாக இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story