சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை கனமழை பாதிப்பு நீடிக்கிறது


சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை கனமழை பாதிப்பு நீடிக்கிறது
x
தினத்தந்தி 4 Nov 2017 5:58 AM IST (Updated: 4 Nov 2017 5:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடியாததால் பாதிப்பு நீடிக்கிறது. இந்தநிலையில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் கனமழை கொட்டியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய மழை மாலை 6 மணிக்கு தீவிரம் அடைந்து நள்ளிரவு வரை வெளுத்து வாங்கியது. அதன்பிறகும் தூறிக்கொண்டே இருந்தது.

இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததோடு, வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து சென்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின்னல் மற்றும் மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும், தண்ணீரில் தவறி விழுந்தும் 7 பேர் பலி ஆனார்கள். குடியிருப்பு பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் தேங்கிய தண்ணீர் நேற்று வடிய தொடங்கியது. சாலைகளில் தேங்கிய தண்ணீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

என்றாலும் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கின்றன. அந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாததால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.

கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்ந்து நீடிக்கும் நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Next Story