வெளிநாடுகளுக்கு செல்வதை விட, மக்கள் பணியாற்றுவதில் விருப்பமுள்ளவன் நான் - அமைச்சர் வேலுமணி


வெளிநாடுகளுக்கு செல்வதை விட, மக்கள் பணியாற்றுவதில் விருப்பமுள்ளவன் நான் - அமைச்சர் வேலுமணி
x
தினத்தந்தி 4 Nov 2017 2:10 PM IST (Updated: 4 Nov 2017 2:43 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளுக்கு செல்வதை விட, மக்கள் பணியாற்றுவதில் விருப்பமுள்ளவன் நான் என அமைச்சர் வேலுமணி கூறி உள்ளார்.

சென்னை

மழை நீர் வடிகாலுக்கு தீர்வு காண வளர்ந்த நாடுகளில் பின்பற்றும் முறைகளை ஆய்வு செய்ய தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி 6 நாள் பயணமாக நாளை ஆஸ்திரேலியா செல்கிறார். அதுபோல் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பெருமளவில் முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆனால்  அமைச்சரின் இந்த வெளிநாட்டு பயணத்திற்கு தி.மு.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவரது தற்போதைய வெளிநாட்டு பயணம் தேவையற்றது என கூறினர்.

இது குறித்து அமைச்சர் வேலுமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

3 மாதத்திற்கு முன்பே திட்டமிட்டதுதான் ஆஸ்திரேலியா பயணம், ஆனால் தற்போது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்வதை விட, மக்கள் பணியாற்றுவதில் விருப்பமுள்ளவன் நான். ஜெயலலிதா அமைச்சரவையில், தொழிற்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் வாய்ப்பு வந்தபோதும், நான் வெளிநாடு செல்லவில்லை.

இன்று காலை மட்டும் 18,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் 1145 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர், 126 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. 4,504 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது, புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை மாநகராட்சி சார்பில் 177 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 244 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது, மீதமுள்ள பகுதிகளில் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நீர்நிலைகளில் இருந்த 5,000 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன.மக்களை பீதியடைய செய்யும் செய்திகளை, சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்.

Next Story