உடையும் அபாயம்: பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் உபரிநீர் வெளியேற்றம்


உடையும் அபாயம்: பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் உபரிநீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 5 Nov 2017 5:15 AM IST (Updated: 5 Nov 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் உபரிநீரை அதிகாரிகள் வெளியேற்றினார். இதனால் அந்த பகுதியை ஒட்டியுள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சென்னை,

சென்னை மண்டலத்துக்குட்பட்ட ஏரிகளில் ஒன்று தான் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி. சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த ஏரி நிரம்பி, ஏரிக்கு அருகில் இருக்கும் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்து வருகிறது.

இந்த நிலையில் ஏரிக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வந்து கொண்டு இருப்பதால், ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரியில் இருந்து உபரிநீரை வெளியேற்றும் பகுதி மிகவும் சேதம் அடைந்து இருந்ததால் உபரிநீர் வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் தவித்தனர்.

நேற்று காலை பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஏரிக்கரையை வந்து பார்வையிட்டனர். ஏரியின் அபாயத்தை உணர்ந்து அதில் இருந்து உபரிநீரை வெளியேற்ற முடிவு செய்து, உபரிநீர் வெளியேறும் பாதையை நேற்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சரிசெய்தனர். மேலும், உபரிநீர் வெளியேறும் பாதை அருகே மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி தடுப்பை ஏற்படுத்தினார்கள்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘ஏரி முழுவதுமாக நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு நீர் வரத்தும் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. எந்த நேரத்திலும் கரை உடையும் அபாயம் உள்ளது. இதனால் உபரிநீரை வெளியேற்ற முடிவு செய்து இருக்கிறோம். அப்படி உபரிநீரை வெளியேற்றினால் மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணையை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் ஏரிக்கு வந்து சேர்ந்துவிடும்’ என்றனர்.

இதுதொடர்பாக அந்த பகுதிமக்கள் கூறுகையில், ‘ஏரியை சரிவர தூர்வாரவில்லை. ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தெரிவித்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அலட்சியமாகவே இருந்தார்கள். இப்போது எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று உபரிநீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அந்த நீர் மீண்டும் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுமோ? என்ற அச்சத்தில் நாங்கள் இருக்கிறோம்’ என்றனர்.


Next Story