‘‘ஏரிகள் நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை’’ அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
‘‘ஏரிகள் நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை’’ என்றும், ‘‘வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’’ என்று, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
சென்னை,
வடகிழக்கு பருவமழையையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் டி.கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் ஆர்.லலிதா, எம்.கோவிந்த ராவ், எம்.விஜயலட்சுமி, மகேஸ்வரி ரவிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதன் பின்னர் ரிப்பன் மாளிகையில் இயங்கும் 24 மணிநேர பேரிடர் மேலாண்மை மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் வேலுமணி கூறியதாவது:–
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்து, வீடுகளில் சமையல் செய்ய இயலாத குடும்பங்களுக்கு அம்மா உணவகங்கள் மற்றும் நிவாரண முகாம்கள் மூலம் உணவுகளை தயாரித்து வழங்கிடவும் அமைச்சர்களுக்கு, தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.கடந்த மாதம் 30–ந்தேதி முதல் இன்று (நேற்று) காலை 8.30 மணி வரை 422.04 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த கனமழையினால் 329 இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டு, 244 இடங்களில் மழைநீர் விரைந்து அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 85 இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மழையின் காரணமாக விழுந்த 70 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. 22 சுரங்கப்பாதைகளும் போக்குவரத்திற்கு பயன்பாட்டில் உள்ளன.
மழை தொடர்பான 4,540 புகார்கள் பெறப்பட்டு 2,992 புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 1548 புகார்களை சரிசெய்ய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் வெளியேற்றும் பணியில் 1,500 பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள். தற்பொழுது ஏரிகள் எதுவும் நிரம்பவில்லை. ஏரிகள் நிரம்பும் அளவுக்கு மழையின் அளவு இல்லை. தற்பொழுதுள்ள குடிநீர் 3 மாத காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய நிலையில்தான் உள்ளது. எனவே, பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ, பீதி ஏற்படுத்தும் வகையிலோ யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்.
சரியான முறையில் பணி செய்யாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமாக மழைப்பொழிவு நேரங்களில் சாலைகளில் விழும் மழைநீர் சாலைகளில் வழிந்தோடுவது சகஜம். அவற்றை விரைவாக அகற்ற தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மேலும், மழைநீர் சேகரிப்பு திட்டம் இல்லாத இடங்களில் மழைநீரை சேகரிக்க வழிவகை செய்து, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசு ஆற்றுப்படுகைகளில் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், அவர்களுக்கு தகுந்த மாற்று ஏற்பாடாக குடியிருப்பு வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டதின் அடிப்படையில், ஆற்றுப்படுகைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 5 ஆயிரம் குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆற்றுப்படுகைகளில் நீர் எளிதில் வழிந்தோட வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.