10 ஆயிரம் பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் தமிழக அரசு தகவல்
10 ஆயிரம் பேர் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை,
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த பருவ மழையால் மொத்தம் 4 ஆயிரத்து 399 பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 578 மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஆகும்.
தேடுதல், மீட்பு மற்றும் வெளியேற்றம், நிவாரணம் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து துறைகளைச் சார்ந்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. 23 ஆயிரத்து 325 முதல் நிலை மீட்பாளர்களைக் கொண்ட 4 ஆயிரத்து 399 முதல் நிலை மீட்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீட்பாளர்களாக 6 ஆயிரத்து 740 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
நீர்நிலைகளில் கண்டறியப்பட்ட 7 ஆயிரத்து 30 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் உள்ளன. 9 ஆயிரத்து 627 பாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 826 சிறு பாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் குறைந்தது இரண்டு மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை இருப்பில் வைக்க தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஜென்செட் போன்ற சாதனங்களை, முதல்தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது.
அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகள் வினியோகிப்பதற்கு ஏதுவாக போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கும் தேவையான மருந்துகள் தயார்நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுமரம், படகுகள் ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் வைத்துக்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. தற்காலிக நிவாரண முகாம்களும் கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கூவம் ஆற்றின் கரையை ஆக்கிரமித்திருந்த 825 வீடுகள், அடையாற்றின் கரையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 4 ஆயிரத்து 134 வீடுகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ஏரி, கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் கொடுங்கையூர் ‘‘பி’’ கால்வாய் ஆகியவைகள் தூர்வாரப்பட்டு, 4 ஆயிரத்து 388.33 மெட்ரிக் டன் கழிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கும் பாதைகளாக கண்டறியப்பட்டு, 60 உயர் அழுத்த டீசல் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றிட தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள பிற மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அவைகளில், வாகனங்கள் இடையூறின்றி செல்ல ஏதுவாக, 5 குதிரைத்திறன் மற்றும் 7.5 குதிரைத்திறன் கொண்ட 458 பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சிறு மரவெட்டும் கருவிகள் 160 மற்றும் 11 மின்சாரத்தின் மூலம் இயங்கும் மரவெட்டும் கருவிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 176 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 27.10.2017 அன்று தொடங்கியது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிக அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்த மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரத்து 640 நபர்கள் 114 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
43 பணியாளர்கள் அடங்கிய ஒரு மாநில பேரிடர் மீட்புக்குழு தாம்பரத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அக்குழு தேவைப்படும் நேரங்களில் தாழ்வான பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும். தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்படும்.
மக்களுக்கு தகவல் கொடுத்த பின்பே, குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்படும். எனவே வதந்திகளை நம்பவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளம் குறித்த சூழ்நிலைகள், மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், எழிலகம் (தொலைபேசி எண் 1070), பெருநகர சென்னை மாநகராட்சி (தொலைபேசி எண் 1913) மற்றும் மாவட்டங்களிலுள்ள அவசர கட்டுப்பாட்டு மையங்கள் (தொலைபேசி 1077) மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.